எத்தனையோ கிரிக்கெட் சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் ஒன்றைக் கூட 'இதுவரை' வென்றதில்லை. ஆனால், 'இதுவரை....' என்ற இந்த வார்த்தை தற்போது 2018ம் ஆண்டில் நீக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகி உள்ளது.
ஆம்! இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே அம்மண்ணில் நடந்து வரும் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் மூன்று போட்டிகளை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஏறக்குறைய ஒருநாள் தொடரை வென்றுவிட்டது என்றே கூறலாம். இன்னும் ஒரு போட்டியை வென்றால், முழுதாக கோப்பையை முதன் முறையாக கைப்பற்றி விடலாம். இன்று இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, சேவாக் போன்ற ஜாம்பவான்கள் இருந்த இந்திய அணியால் கூட தென்னாப்பிரிக்காவை அதன் மண்ணில் வீழ்த்தி டெஸ்ட், ஒருநாள் தொடரை ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. இவ்வளவு ஏன், இந்தியாவின் சிறந்த கேப்டனாக விளங்கும் தோனியால் கூட இதை செய்ய முடியவில்லை. ஆனால், கோலி தலைமையிலான டீம் இந்தியா, தற்போது ஒருநாள் தொடரின் கோப்பையை வெல்ல கைக்கு எட்டும் தூரத்திலேயே உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருப்பது அவர்களது தோல்விக்கு காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும், இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்நிலையில், இன்று நான்காவது ஒருநாள் போட்டியை வென்றுவிட்டால், இந்திய அணி முதன் முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடர் வென்று புதிய சரித்திரம் படைக்கும். பொதுவாக, ஆசிய அணிகள் தென்னாப்பிரிக்காவில் கடுமையாக தடுமாறும் நிலையில், இந்திய அணியின் இந்த வெற்றி மற்ற ஆசிய அணிகளுக்கு மேலும் நம்பிக்கையை ஊக்குவிக்கும்.
அதேசமயம், இந்தியா தான் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வெல்லப் போகும் முதல் ஆசிய அணியா என்று பார்த்தால், 'இல்லை' என்பதே பதில். 'ஆம்!', இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அந்த சாதனையை படைத்துள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மிஸ்பா -உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
அதுவும், சாதாரண தென்னாப்பிரிக்க அணியை அவர்கள் வீழ்த்தவில்லை. ஸ்மித் தலைமையிலான அந்த தென்.ஆ அணியில் ஆம்லா, காலிஸ், டி காக், டி வில்லியர்ஸ், டுமினி, மில்லர், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் என உச்சக்கட்ட பலம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
முதல் இரண்டு போட்டிகளையும் வென்று பாகிஸ்தான் அந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி, தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், அதற்கு முன்னரோ, அதற்கடுத்தோ வேறு எந்த ஆசிய அணியும் தென்னப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வெல்லவில்லை.
இப்போது அந்த மோசமான வரலாற்றை மாற்ற இந்திய அணிக்கு மெகா சான்ஸ் கிடைத்துள்ளது. கொடி நாட்டுமா இந்தியா?.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.