இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது. புதிய ஆண்டின் முதல் போட்டி என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேப்டன் ரோகித்சர்மா, இடது கை கட்டைவிரலில் காயத்தில் இருந்து மீளாததால், ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியதால், இந்த முறையும் அவருக்கே பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக உள்ளார்.
குறிப்பாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட புதிய இந்திய அணி இதில் களம் இறங்குகிறது.
மறுபுறம் கேப்டன் ஷனகா, துணை கேப்டன் ஹசரங்கா டி சில்வா தலைமையிலான இலங்கை அணியில் ஹசரங்கா நிஷங்கா, தனஞ்செயா, குசால்மெண்டிஸ், ராஜபக்சே, சரித் அசலங்கா உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம்.
இந்திய ப்ளேயிங் லெவன்: இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமாரா, பிரமோத் மதுஷன்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ருத்ராஜ் இந்த முறை துவக்க வீரராக வர அதிக வாய்ப்பு உள்ளது. ஓப்பனிங்கில் அவருக்கு ஜோடியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் இடம் பெறலாம். ஆனால் சுப்மன் கில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளன.
துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பர் 3வது வீரராக களமிறங்குகிறார். தொடர்ந்து 4வது வீரராக சீனியர் வீரர் சஞ்சு சாம்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா 5வது இடத்திலும் விளையாடுவார்கள். இதே போன்று 3 வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்சல் பட்டேல் உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், யுவேந்திர சாகல் என 3 ஸ்பின்னர்கள் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் இந்தியா களமிறங்குகிறது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“