IND vs SL test Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த டி20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான முதலாவது டெஸ்ட் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
— BCCI (@BCCI) March 1, 2022
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான ரஹானே, புஜாரா, விருத்திமான் சாஹா மற்றும் இஷாந்த் சர்மா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புஜாரா - ரஹானேவுக்கு ஓய்வு; யாருக்கு வாய்ப்பு?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த வீரர்களான சேதேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்க்யா ரஹானே ஆகிய வீரர்கள் இல்லாமல் முதல் முறையாக களமிறங்குகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே.
முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் பிரபல ஜோடியாக அறியப்பட்ட ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களின் ஓய்வை அறிவித்தனர். ஆனால் அவர்களின் 16 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் இந்த ஜோடி ஒரேயொரு முறை மட்டும் தான் சேர்ந்து விளையாடமால் இருந்துள்ளது.
இப்படியொரு நிகழ்வு இந்திய அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கேறியுள்ளது. ஆனால், புஜாரா - ரஹானே ஜோடி இன்னும் அணியில் இருந்து ஓய்வு பெறவில்லை. எனினும், அவர்கள் இருவரையும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி இருப்பது, அணியில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அந்த இடங்களுக்கு (நம்பர் 3 மற்றும் நம்பர் 5) தற்போது உள்ள இளம் வீரர்களில் யார் யார் தகுதியானவர்கள் என்பது குறித்து முடிவெடுப்பதில் கேப்டன் ரோகித்து சற்று தலைவலியாக உள்ளது.
சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விகாரி; எந்த இரு வீரர்களுக்கு வாய்ப்பு?
காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகிய இருவரும் வலைப் பயிற்சியின் போது நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர் என டெஸ்ட் அணியின் துணைகேப்டன் பும்ரா குறிப்பிட்டு இருந்தார். எனவே, இந்திய அணியின் லோவர் மிடில்-ஆடரில் ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் அஷ்வின் என 6 முதல் 8வது இடம் வரை செட் ஆகிவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களமாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், காலியாக உள்ள 3வது மற்றும் 4வது இடங்கள் எந்த வீரருக்கு என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எனினும், இந்திய டெஸ்ட் அணியில் சில இளம் வீரர்கள் சேர்ப்பட்டுள்ளார். இதில் அனுபவம் வாய்ந்த வீரர்களாக சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எந்த இரண்டு வீரருக்கு அணியில் இடம் கிடைக்கும்? என்பதில் தான் கேள்வியெழும்புகிறது.
ஹனுமா விஹாரி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் என்று வரும் போது விஹாரியை அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம். இந்த டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் கேப்டன் கோலிக்கு முதுகுவலி ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமாடினார். முதல் இன்னிங்சில் 20 ரன்கள் சேர்த்த அவர், 2வது இன்னிங்சில் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அவர் இந்திய டெஸ்ட் அணிக்கான டாப் 5 வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
அவருக்கான இந்திய டெஸ்ட் அணி வாய்ப்பை பொறுத்தவரை, அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவைப்படும்போது மட்டுமே அவர் பயன்படுத்தப்படுகிறார். அதுவும் அயல்நாட்டில் மண்ணில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் அவரது டெஸ்ட் சராசரி 34.2 ஆக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் விஹாரியின் பலம் அவரது தட்டுப்பாட்டம் தான் (defence-first batter) என்று குறிப்பிடப்படுகிறது. 11 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அவரின் ஸ்டிரைக் ரேட் சராசரி 42.66 ஆகவும் 99 முதல்தர போட்டிகளில் அவரது ஸ்டிரைக் ரேட் சராசரி 48.74 ஆகவும் உள்ளது. தற்போதுள்ள பந்துவீச்சுக்கு ஏற்ற சூழ்நிலைகள் மற்றும் ஃபிட் மற்றும் டீப் விக்கெட்டில் அடிப்பது இவர் போன்ற தட்டுப்பாட்ட பேட்டர்களுக்கு மிகவும் கடினமாகி வருகிறது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் பந்துகள் சரியான நேரத்தில் அவர்களை நோக்கி வீசப்படுவதில்லை.
அந்த வகையில் புஜாரா ஒரு அசாதாரணமானவர் என்று குறிப்பிடலாம். இந்த கடினமான சூழ்நிலைகளில் அவர் தனது தட்டுப்பாட்ட பேட்டிங் மூலம் ஆட்டத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வார். மேலும், பல ஆட்டங்களில் அணிக்கு வெற்றியையும் தேடி தந்திருக்கிறார். இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த அதிக மன ஆற்றலும் பிடிவாதமும் அவரிடம் இருந்திருக்க வேண்டும். புஜாராவிடம் கண்ட அணி நிர்வாகம் இந்த சில திறன்கள் விஹாரியிடமும் உள்ளது என தெரிந்து கொண்டால், அவரை 3 வது வீரராக பேட் செய்யச் சொல்லலாம்.
ஷ்ரேயாஸ் ஐயர்
உண்மையில் புஜாராவின் இடத்தில் விளையாட மிகச் சரியான தேர்வாக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார். ஏனென்றால், அவர் கடந்தாண்டு இறுதியில், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும், அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் (முதல் இன்னிங்ஸ்), அரைசதம் (2வது இன்னிங்ஸ்) என வெளுத்து வாங்கினார். இவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. இதனால் அவருக்கு தென்ஆப்பிரிக்கா சுற்றுபயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த தொடரில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலிக்கு முதுகுவலி வந்த போது இவரைத் தான் அணியில் சேர்ப்பர் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஷ்ரேயாஸுக்கு வயிற்று வலி ஏற்பட்டவே, வாய்ப்பு விஹாரி வழங்குப்பட்டது.
எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்தி, அந்த அணியின் சுழலை தும்சம் செய்திருந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கான இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. ஏனென்றால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் அவரிடம் நிரம்பி இருக்கிறது.
சுப்மன் கில்
புஜாராவின் இடத்தில் விளையட மற்றொரு சரியான வீரர் யார் என பேசும் போது, கில் மிகப்பொருத்தமான வீரராக இருப்பார். ஏனென்றால், நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதேவேளையில், விஹாரி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணியுடன் அனுப்பப்பட்டார்.
நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் மிடில்- ஆடரில் பேட் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவே அவர் களமிறங்க சரியான இடம் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், கான்பூர் டெஸ்ட்க்கு முன்னதாக, தொடக்க வீரர் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்படவே, கில் ஓப்பனிங் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டது.
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன், கில்லின் தாடையில் காயம் மீண்டும் ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார். டெஸ்ட் அணியில் 2 இடங்கள் வேறு காலியாக உள்ளன. எனவே, அவர் மிடில் -ஆடரில் மீண்டும் களமிறக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த மூன்று வீரர்களில் முழுத்திறன் கொண்டவராகவே கில் இருக்கிறார். இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் சராசரி 56.56 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 100 பந்துகளுக்கு 69.8 என்று உள்ளது. 13 முதல்தர போட்டிகளில் 8 போட்டிகளை இந்தியா ஏ அணிக்காக அவர் விளையாடி இருக்கிறார். அப்போதைய இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்பது கூடுதல் தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.