6 அணிகள் பங்கேற்ற ஆசியகோப்பை தொடர், இலங்கையில் நடைபெற்றது. இதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கொழும்பு பிரமதேசா மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
3 மணிக்கு தொடங்கவேண்டிய இந்த போட்டி மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆட்டத்தின் 3-வது பந்தில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணிக்கு 4-வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். 4-வது ஓவரின் 1,3,4, மற்றும் 6-வது பந்துகளில் விக்கெட் வீழ்த்தி மிரள வைத்தார். இதனால் தொடக்கம் முதலே ஆட்டம் கண்ட இலங்கை அணி 50 ரன்களில் வீழ்ந்தது. அதிகபட்சமாக குஷாலட மெண்டீஸ் 17 ரன்களும், ஹேமன்தா 13 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 5 வீரர்கள் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஷர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 51 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி அசத்தியது.
இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 8-வது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 23 ஆண்டு காலத்திற்கு பிறகு இலங்கை அணியை பழி தீர்த்துள்ளது.
கொக்ககோலா சாம்பியன் டிராபி
கடந்த 2000-2001 ஆம் ஆண்டு சார்ஜாவில் கொக்கோ கோலா சாம்பியன் டிராபி தொடர் நடைபெற்றது. இந்தியா இலங்கை ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் ஜிம்பாப்வே அணியுடனான 2 போட்டியிலும் வெற்றி பெற்ற கங்குலி தலைமையிலான இந்திய அணி ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணியுடன் 2 லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த ஜிம்பாப்வே அணி தொடரில் இருந்து வெளியேறியதால், இலங்கையுடன் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடியது.
இந்தியா – இலங்கை இறுதிப்போட்டி
லீக் போட்டியில் தோல்வியடைந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது. கேப்டன் சனத் ஜெயசூர்யா 161 பந்துகளில் 21 பவுண்டரி 4 சிக்சருடன் 189 ரன்கள் குவித்து அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரசல் அர்னால்ட் 52 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி இந்த போட்டியில் எக்ஸ்ட்ரா வகையில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜாகீர் கான், சுனில் ஜோஷி, தெண்டுல்கர், கங்குலி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
சொற்ப ரன்களில் வீழ்ந்த இந்தியா
தொடர்ந்து 300 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது, 8 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி 54 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் ஒரு வீரர் கூட டக் அவுட் ஆகவில்லை என்றாலும் கூட ராபின் சிங் (11) தவிர மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கை தாண்டவில்லை. இலங்கை அணி தரப்பில், சமிந்தா வாஸ் 5 விக்கெட்டுகளும், முரளிதரன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் 245 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி அந்த தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
பழி தீர்த்த இந்தியா
தற்போது இலங்கையில் நடைபெற்ற ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை அணியை 50 ரன்களில் சுருட்டி இந்திய அணி பழி தீர்த்துள்ளது. மேலும் இந்த போட்டியில் 37 பந்துகளில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியதை தொடர்ந்து உலகில் அதிக பந்துகள் (263) மீதம் வைத்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் உலகின் மிக குறைந்த பந்துகளில் முடிந்த 3-வது போட்டி இதுவாகும். இந்த போட்டியில் இலங்கை அணி 92 பந்துகள் விளையாடிய நிலையில், இந்திய அணி 37 பந்துகள் விளையாடியது. இதன் மூலம் ஆசியகோப்பை 2023- இறுதிப்போட்டி வெறும் 129 பந்துகளில் முடிந்தது. இந்த போட்டியே குறைந்த பந்துகளில் முடிந்த உலகின் 3-வது போட்டியாகும்.
ஒருநாள் போட்டிகளில் குறைந்த ஸ்கோர்
ஆசியகோப்பை இறுதிப்போட்டியில் 50 ரன்களில் சுருண்ட இலங்கை அணி உலக கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் குறைந்த ரன்களில் வீழ்ந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த பட்டியலில் 54 ரன்களுடன் இந்தியா 2-வது இடத்திலும், 78 ரன்களுடன் இலங்கை 3-வது இடத்திலும் உள்ளது. அதேபோல் இந்தியாவுக்கு எதிராக குறைந்த ரன்களில் சுருண்ட அணிகளின் பட்டியலிலும் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 78 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் ஒரு ஆண்டில் இலங்கை அணியை இந்திய அணி 100-க்கு குறைவான ரன்களில் சுருட்டியுள்ளது.
முகமது சிராஜ் சாதனை
இந்த போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் முகமது சிராஜ் ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஸ்டூவர்ட் பின்னி 6/4, கும்ளே 6/12, பும்ரா 6/19, ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர்.
கங்குலிக்கு கை கொடுத்த ரோகித்
கடந்த 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற கோக் கோலா சாம்பியன் டிராபியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் 54 ரன்களில் சுருண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளனது. தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் 50 ரன்களில் (இந்தியாவின் 54-க்கு குறைவான ரன்) சுருட்டி பதிலடி கொடுத்து 23 ஆண்டுகளுக்கு பின் பழி தீர்த்துள்ளது. மேலும் இந்த தொடரின் இலங்கை அணியுடன் மோதிய 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.