ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அதன்பிறகு நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெறுகிறது. பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. இந்திய அணி இதற்கு முன் கொல்கத்தாவில் வங்கதேச அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை பகல் இரவு ஆட்டமாக விளையாடியது.
அதன்பிறகு தற்போது இந்திய அணி தனது 2-வது பகல் இரவு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இதன்படி இந்திய அணியில் மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கியுள்ளனர். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய பிரித்வி ஷா முதல் ஓவரின் 2-வது பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். மீச்செல் ஸ்டர்க் இவரது விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா தடுப்பாட்டத்தில் விளையாட மறுமுனையில் தொடக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வால் 40 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட்கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்து விக்கெட் விழாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் டெஸ்ட் வீரர் என்று வர்ணிக்கப்படும் புஜாரா 160 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரியுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் கோலி அரைசதம் கடந்து 74 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன்அவுட்டில் வீழ்ந்தார். அடுத்து களமறிங்கிய ரஹானே 42 ரன்களிலும், பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த ஹனுமா விஹாரி 16 ரன்களிலும் வெளியேறினர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த விருத்திமான சஹா அஸ்வின் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 15 ரன்களிலும், சஹா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில், மீச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹாசில்வுட், கம்மின்ஸ், லியோன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு வெற்றி அல்லது 3 போட்டிகளை டிரா செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் தொடரை இழந்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"