விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நிகழ்த்தியிருப்பது வெறும் சாதனை மட்டுமல்ல... கனவு... கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும், கிரிக்கெட்டை காதலிக்கும், ஏன்... கிரிக்கெட்டை போற போக்கில் ரசிப்பவர்களின் ஏக்கம் என்றும் கூட சொல்லலாம். அப்படியொரு 'நாஸ்டாலஜி' தருணம் உருவாக்கப்பட்டிருக்கும் நாள் இது. இனி, இப்படியொரு நாள், ரசிகர்களாகிய நமக்கோ, இந்திய அணிக்கோ கிடைக்குமா? என்பது யோசிக்கக் கூடிய ஒன்று...
ஆனால், முடியாததையும் முடியும் என நிரூபித்துக் காட்டும் வேட்கையும், தீரா கிரிக்கெட் பசியும் கொண்டிருக்கும் கேப்டன் கோலி இருக்கும் போது, இனி எல்லாம் சாத்தியமே என்றே உரக்க சொல்லத் தோன்றுகிறது. ஆம்! ஆஸ்திரேலியா எனும் சிங்கத்தை அதன் குகையிலேயே வைத்து அடக்கியிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி!. அதைப் பற்றித் தான் பேசுகிறேன்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து, ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க, பல கனவுகளை சுமந்து கொண்டு லாலா அமர்நாத் தலைமையிலான இந்திய அணி தனது 'கன்னி' பயணத்தை ஆஸ்திரேலியா நோக்கி தொடங்கியது. நமக்கு சுதந்திரம் கிடைத்து வெறும் இரண்டே மாதங்கள் தான் அப்போது ஆகியிருந்தன. ஆஸ்திரேலிய கேப்டன் யார் தெரியுமா? டான் பிராட்மேன்!.
ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், நான்கு போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. தோல்வி என்றால் சாதாரண தோல்வி அல்ல... ஒவ்வொன்றும் மெகா தோல்விகள்.. ஆனால், ஒரேயொரு டெஸ்ட் போட்டியை மட்டும் இந்தியா டிரா செய்திருந்தது. சிட்னியில் நடைபெற்ற அந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 188 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஆடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கிட்டதால், ஆட்டம் முற்றிலும் தடைப்பட்டது. அப்போது இந்தியா, ஆஸ்திரேலியாவை விட 150 ரன்களுக்கும் மேல் முன்னிலையில் இருந்தது. பிட்ச்சின் தாறுமாறான பவுன்ஸ் காரணமாக, இந்தியாவுக்கே அந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், மழையால் மொத்த ஆட்டமும் நடைபெறாமல் போக, இந்திய அணி தனது வெற்றி வாய்ப்பை இழந்தது.
இன்றும் அதே சிட்னியில் மழை காரணமாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தாலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது.
லாலா அமர்நாத்துக்கு பிறகு, எத்தனை எத்தனை கேப்டன்கள்...! எத்தனை எத்தனை ஜாம்பவான்கள்...! ஆனால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கோப்பை என்பது மட்டும் சாத்தியமே இல்லாத நிகழ்வாக இந்தியா பார்த்தது. இங்கு எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில், யாருடைய தரத்தையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஆளுமைகளால் எழுத முடியாத சரித்திரத்தை விராட் கோலி இன்று எழுதியிருக்கிறார்.
சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் கழித்து கிடைத்திருக்கும் வெற்றி... சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிலிருந்து கணக்கிட்டால், 87 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் கிடைத்த முதல் டெஸ்ட் தொடர் வெற்றி.
விராட் கோலியின் ஆக்ரோஷ குணமே இந்த வெற்றிக்கு காரணம் என்றால், அதுதான் வேடிக்கை. பிஷன் சிங் பேடியிடம் இல்லாத ஆக்ரோஷமா, கபில் தேவிடம் இல்லாத ஆக்ரோஷமா, 'தாதா' சவுரவ் கங்குலியிடம் இல்லாத ஆக்ரோஷமா!! ஆனால், கோலியின் ஆக்ரோஷம் பாஸிட்டிவ் வைப்ரேஷனை வெளிப்படுத்தியது என்பதே உண்மை! காரணம், கேப்டனாக ஆக்ரோஷம் காட்டும் கோலி, பேட்ஸ்மேனாக அதைவிட 10 மடங்கு அதிக ஆக்ரோஷம் காட்டுவதே!.
என்னை சீண்டினால், உன்னையும் சீண்டுவேன்.... சீண்டாமல் போனாலும் சீண்டுவேன்... வார்த்தைகளால் மட்டுமல்ல... பேட்டாலும் கூட! இதுதான் விராட்டின் கமாண்டிங் சூத்திரம். தென்னாப்பிரிக்காவில், இங்கிலாந்தில் பலிக்காத இந்த சூத்திரம் ஆஸ்திரேலியாவில் பலித்துவிட்டது.
பல நாட்களாக ஃபார்மில் இல்லாத புஜாரா தனது விஸ்வரூபத்தை காட்டியதும், பும்ரா எனும் 'வேரியேஷன் கிங்'கின் ஆர்ப்பாட்டமான பவுலிங்கும் இந்திய அணியின் இந்த மகத்தான சாதனைக்கும், கேப்டனாக கோலியின் மகுடத்தில் வைரத்தை பொறிக்கவும் வித்திட்டன.
அதுதவிர, மாயங்க் அகர்வால் எனும் தொடக்க வீரன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களை பொறாமை பட வைத்துவிட்டான், 'இப்படி ஒரு அறிமுக ஓப்பனர் நமக்கு கிடைக்கவில்லையே' என்று!.
இத்தொடருக்கு முன்னர், ஆஸ்திரேலியா ஒரு அணியாக வலுவிழந்து காணப்பட்டாலும், 'எனது கோட்டையில் அசைக்க முடியாது' என்ற முழக்கத்துடனேயே விளையாடியது.
ஆனால், பல அவமானங்களையும், தோல்விகளையும், வலிகளையும், ஏமாற்றங்களையும், கிண்டல்களையும், அரசியலையும் கடந்து வந்த அடிப்பட்ட சிங்கத்தின் கர்ஜனை, இன்று அந்த கோட்டையை தரைமட்டமாக்கிவிட்டது!.
வாழ்த்துகள் விராட் & கோ!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.