மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா... காத்திருக்கும் சவால்!

அரையிறுதிப் போட்டியில், 2-வது இடம்பிடித்த ஆஸ்திரேலியா, 3-ம் இடத்தில் உள்ள இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

11-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. டெர்பியில் நேற்று நடைபெற்ற  லீக் ஆட்டத்தின் போது இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியாது. இதனால், அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் எடுக்காமல் மெய்டன் ஆன நிலையில், விரைவிலேயே விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பூனம் ரவுத் 4 ரன்னிலும், மந்தனா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 7.4 ஓவர்களில் 21-ரன்களுக்கு 2 விக்கெட் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலிராஜியும், ஹர்மன்பிரீத் கவுரும் நிதானமாக ஆடி வந்தனர். இதனிடையே, ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 27.1 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

ஹர்மன்பிரீத் கவுர் 60 ரன்களில் (90 பந்து, 7 பவுண்டரி) எடுத்திருந்தபோது, ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா, ரன் எடுக்காமல் வந்தே வேகத்தில் நடையை கட்டினார். இதனால், இந்திய அணி 36.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து களம் புகுந்த வேதா கிருஷ்ணமூர்த்தி அதிரடி காட்டினார். நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்து வீச்சை அடித்து நொருக்கிய வேதாகிருஷ்ணமூர்த்தி, 34 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறு முறையில் பொறுப்பான முறையில் பேட்டிங் செய்து வந்த கேப்டன் மிதாலிராஜ் தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

கடைசி ஓவரில் கேப்டன் மிதாலிராஜ் (109 ரன், 123 பந்து, 11 பவுண்டரி), வேதா கிருஷ்ணமூர்த்தி (70 ரன், 45 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகா பான்டே (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்திருந்தது.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வீராங்கனைகள் கேப்டன் சுசிபேட்ஸ் , ராச்சல் பிரைஸ்ட் ஆகியோர் தலா 5 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினர். அதன் பிறகு சுழற்பந்துவீச்சின் பிடியில் சிக்கி நியூசிலாந்து அணி 25.3 ஓவர்களில் வெறும் 79 ரன்னில் சுருண்டது.

இதன் மூலம் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராஜேஷ்வரி கெய்க்காட் 15 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற சிறப்பான வெற்றி இதுவாகும். இந்திய அணி உலக கோப்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

7 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இதனால், நியூசிலாந்து அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.

இதேபோல,ஆஸ்திரேலிய அணி, 59 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. இதனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 12 புள்ளிகளை பெற்றது. எனினும், ரன்ரேட் அடிப்படையில் பார்க்கும் போது, இங்கிலாந்து முதலிடத்தையும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இந்திய அணி 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென் ஆப்ரிக்க அணி 9 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தது.

அரையிறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, 4-வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்க அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

இதேபோல, மற்றொரு அரையிறுதிப் போட்டியில், 2-வது இடம்பிடித்த ஆஸ்திரேலியா, 3-ம் இடத்தில் உள்ள இந்திய அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. லீக் போட்டியின் போது இந்திய அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. எனவே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி அரையிறுதியில் விளையாடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இறுதிப்போட்டியானது ஜூலை 23-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

×Close
×Close