பெண்கள் உலக கோப்பை: ஆஸி.,-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.

எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.

இதனையடுத்து, இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது, அதில், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வியை தழுவியிருந்தது. இந்திய அணி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டிருந்தது. ஆஸ்திரேலிய – இந்திய அணிகள் சந்தித்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இந்திய அணி 8 முறையும் வெற்றி பெற்றிருந்தன.

இத்தகைய பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை நேற்றைய அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளான மந்தனா, பூணம் ரவுட் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்களில் அவுட்டானார். அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்ணையிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்கள் குவித்ததுள்ளது. இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக, அந்த அணியின் பிளாக்வெல் 90 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 40.1 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது.

இந்நிலையில், நேற்றைய வெற்றி மூலம் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. அந்த அணி லீக் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது.

இதற்கு முன்பு மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து அணி, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேபோல், கோப்பையை தட்டிச் செல்லும் வெறியுடன் இந்திய அணியும் களமிறங்கும் என தெரிகிறது.

×Close
×Close