Advertisment

U-19 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை! மாஸ் காட்டிய கோச் ராகுல் டிராவிட்!

U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்திய அணி நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
U-19 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை! மாஸ் காட்டிய கோச் ராகுல் டிராவிட்!

அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா வெற்றி

U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்திய அணி நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளது.

Advertisment

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மவுன்ட் மவுங்கனுயி நகரில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ப்ரித்வி ஷா தலைமையிலான இளம் இந்திய அணி நான்காவது முறையாக பட்டம் வெல்லும் கனவுடன் களம் கண்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்து 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டும் எடுத்தது. அந்த அணியின் ஜோனதன் மட்டும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 76 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக வீசுபவரும், ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக 3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவருமான கம்லேஷ் நாகர்கோடி 9 ஓவர்கள் வீசி, 41 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

publive-image கம்லேஷ் நாகர்கோடி

 

இஷான் போரேல், ஷிவா சிங் மற்றும் அன்குல் ராய் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர், 217 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்தது. 11.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்த போது, கேப்டன் ப்ரித்வி ஷா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய 'ஜூனியர் விராட் கோலி' ஷுப்மன் கில் 31 ரன்னில் அவுட்டானார். இந்த உலகக் கோப்பைத் தொடரில், குறைந்தபட்சம் அரைசதம் கூட எடுக்காமல் ஷுப்மன் கில் அவுட்டாவது இதுவே முதல் முறை. 63, 90*, 86, 102*, 31 என மொத்தம் இந்த தொடரில் 5 போட்டிகளில் 372 ரன்கள் குவித்துள்ளார்.

அதேசமயம் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா சதம் (101) விளாசி அசத்தினார். இதனால் எந்தவித நெருக்கடியும் இன்றி, இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் விளையாடிய U-19 இந்திய அணி, கடந்த 2016ல் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் கோப்பையை பறிகொடுத்தது. ஆனால், இம்முறை அணியை வெற்றி பெற வைத்து கோப்பையை வென்றுத் தந்துள்ளார் டிராவிட். அதுவும், இத் தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வெல்ல டிராவிட் முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

2018 U-19 உலகக் கோப்பையில் இந்தியா:

Ind v Aus - Won by 100 runs

Ind v PNG - Won by 10 wkts

Ind v Zim - Won by 10 wkts

Ind v Ban - Won by 131 runs

Ind v Pak - Won by 203 runs

Ins v Aus - Won by 8 wkts

மேலும், U-19 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இப்போட்டிக்கு முன்பு வரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே அதிகபட்சமாக தலா மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன. தற்போது 4-வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று, U-19 பிரிவில் அதிக முறை உலகக் கோப்பை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

முன்னதாக, லீக் பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment