இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மற்றும் 3 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டிசம்பர் 24-ம் தேதியுடன் இத்தொடர் முடிவுக்கு வருகிறது. இந்த தொடர் முடிந்த மூன்று தினங்களில் (27- ம் தேதி) தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான தொடர் முடிந்ததும் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி செல்வதால், இந்திய அணி பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களில் பயிற்சி பெற போதிய அவகாசம் இல்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கலந்து கொண்டார்.
அப்போது விராட் கோலியிடம், ‘‘இலங்கைக்கு எதிராக நீங்கள் பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்கள் கேட்பீர்களா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கோலி, "ஆமாம் நாங்கள் அந்த வகையான ஆடுகளங்களையே கேட்போம். ஏனெனில், துரதிருஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன் எங்களுக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. பிசிசிஐ-யிடம் சரியான திட்டமிடல் இல்லாததால், இந்திய அணியின் செயல்திறன் குறைகிறது. இருப்பினும், எங்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. எனவே, அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் பவுன்ஸ் பந்துவீச்சுகளை எதிர்கொண்டு தென்னாப்பிரிக்க சூழலை பெற முயற்சிப்போம்" என்றார்.
கேப்டன் விராட் கோலி முதன்முறையாக இவ்வாறு நேரடியாக பிசிசிஐ-யை விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மற்றொரு விஷயத்தையும் விராட் கோலி அங்கு முன்வைத்தார். அதாவது, "தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்காது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இந்தியாவின் நம்பிக்கை சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கும் என்பதை உறதியாக சொல்ல முடியாது" என்றார்.