இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலககோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதோடு மட்டுமல்லாமல் ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளளது. அதேபோல் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ஒரு அணியாகவும், தனிப்பட்ட முறையில் பல வீரர்களும் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த சாதனைகளை படைக்க முக்கிய காரணங்களில் ஒருவர் தான் சி.கே.நாயுடு. இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் இவர் தான். 1700-களில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் விளையாட தொடங்கப்பட்ட நிலையில், 1848-ம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் பார்சி கிரிக்கெட் க்ளப் தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கிரக்கெட் க்ளப். அதன்பிறகு 1926-ம் ஆண்டு இந்தியா சர்வதேச கிரிக்கெட் க்ளப்பில் இணைந்தது.
இந்தியாவின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி 1932-ம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது, இந்த முதல் சர்வதேச போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியவர் சி.கே.நாயுடு.
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடு
1895-ம் ஆண்டு நாக்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் சி.கே.நாயுடு. அவரின் முழு பெயர் கோட்டாரி கனகையா நாயுடு. இவரது தாத்தா நாராயணசாமி நாயுடு அப்போதைய காலக்கட்டத்திலேயே தனது மகன்களை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தவர். சி.கே.நாயுடுவின் அப்பா சூரியபிரகாஷ் நாயு லண்டன் கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய அவர் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை ஊக்குவித்துள்ளார்.
சி.கே.நாயுடு பிறந்ததை கொண்டாடும் வகையில் அவரது தாத்த நாராயணசாமி நாயுட 1896-ம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் - நாயுடு லெவன் அணிகளுக்கு இடையிலாக க்ளப் போட்டியில் செப்பு நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளார். செயின்ட் பிரான்சிஸ் டி’சேல்ஸ் உயர்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சி.கே.நாயுடு ஹிஸ்லாப் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை
சி.கே.நாயுடு தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிடிப்பின்போதே கிரிக்கெட் அணியி்ன் கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல் ஹாக்கி மற்றும் கால்பந்து போட்டியிலும் தனது திறனை வளர்த்துக்கொண்டவர். ஆர்.ராஜண்ணா என்பவரிடம் பயிற்சி பெற்ற சி.கே.நாயுடு ஆரம்பத்தில் ஒரு தடுப்பாட்ட பேஸ்ட்மேனாக இருந்துள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த தந்தை சூரியபிரகாஷ் மேலும் தாக்குதல் ஆட்டத்தை தொடருமாறு ஊக்குவித்துள்ளார்.
1916-ம் ஆண்டு மும்பையில் க்ளப் அணிக்காக தனது அறிமுக போட்டியில் களமிறனார். சி.கே.நாயுடு. ஐரோப்பியவர்கள் – இந்தியர்கள் இடையே நடைபெற்ற அந்த போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்து தத்தளித்தபோது 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சி.கே.நாயுடு, முதல் இன்னிங்சில் 27 ரன்களும், 2-வது இன்னிங்சில் 10 ரன்களும் குவித்தார். அதேபோல் பந்துவீச்சில் 97 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல்தர போட்டியில் உலக சாதனை
தொடர்ந்து 1917-ம் ஆண்டு நடைபெற்ற பார்சி க்ளப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய சி.கே.நாயுடு, இறுதிப்போட்டியில் 80 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்துள்ளார். 1918-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய லெவன் அணியில் களமிறங்கிய இவர், முதல்தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, 122 ரன்கள் குவித்தார். 1919-ல் மத்திய மாகாணம், 1920-ல் மெட்ராஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதில் 1920-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய அணிக்கு எதிராக களமிறங்கி சதமடித்தார் சி.கே.நாயுடு. இதில் அவர் அடித்த ஒரு சிக்சர் ஸ்டேடியத்திற்கு வெளியில் சுமார் 46 மீட்டர் வெளியில் சென்றது. இந்த சிக்சர் 140 மீட்டர் தூக்கியடிக்கப்பட்ட சிக்சராகும். 1926-27-ல் நடைபெற்ற மேரிலேபோன் க்ளிப் அணிக்கு எதிரான போட்டியில் 116 நிமிடங்கள் களத்தில் இருந்து 153 ரன்கள் விளாசிய சி.கே.நாயுடு 11 சிக்சர்கள் அடித்திருந்தார். முதல் தர போட்டிகளில் இது உலக சாதனையாக அமைந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சி.கே.நாயுடுவுக்கு மேரிலேபோன் க்ளிப் சார்பில் சில்வர் பேட் பரிசு அளிக்கப்பட்டது.
சர்வதேச போட்டியில் அறிமுக கேப்டன்
1931-ல் இந்திய அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அணி 1932-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இங்கிலாந்து வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், இதற்கு சம்மதிக்காத பிசிசிஐ இந்தியர் ஒருவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்தது. இந்த நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்த சி.கே.நாயுடு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பட்டியாலா மகாராஜா கேப்டனாவும், லிம்ப்டி இளவரசர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பு பட்டியாலா மகாராஜா தனது மாநில வேலைகளில் கவனம் செலுத்தியதால், போர்பந்தர் மகாராஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரும் கேப்டன் பதவியைள துறைந்ததால், துணை கேப்டன் லிம்ப்டி இளவரசருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே லிம்ப்டி இளவரசர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால், கேப்டன் பொறுப்பு சி.கே.நாயுடு வசம் வந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஆனாலும் சி.கே.நாயுடு கேப்டன் பதவியில் இருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாயுடுவின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி
36 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட சி.கே.நாயுடு, 1932-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இந்தியாவின் முதல் சர்வதேச போட்டியிலல் களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 259 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சி.கே.நாடு 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பீல்டிங்கின்போது கையில் காயமடைந்தாலும் பேட்டிங்கில் 40 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்கள் குவித்தது. இதில் சி.கே.நாயுடு எடுத்த 40 ரன்களே ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 275 ரன்கள் குவிக்க, இந்திய அணி 187 ரன்களில் சுருண்டு 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து. 2-வது இன்னிங்சில் சி.கே.நாயுடு 10 ரன்கள் எடுத்தார்.
சி.கே.நாயுடு புள்ளிவிவரங்கள்
இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாயுள்ள சி.கே.நாயுடு, 2 அரைசதங்களுடன் 350 ரன்கள் குவித்துள்ளார். இதில் 80 ரன்கள் எடுத்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளா. அதேபோல் 207 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 26 சதம் 58 அரைசதத்துடன் 11825 ரன்கள் குவித்து 411 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் 51 வயதில் ரஞ்சிக்கோப்பை தொடரில் களமிறங்கிய 200 ரன்கள் குவித்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.
1953-54 காலக்கட்டத்தில் ரஞ்சிக்கோப்பை தொடரில் இருந்து சி.கே.நாயுடு ஓய்வு பெற்ற நிலையில், 1956-57 காலக்கட்டத்தில் அவர் மீண்டும் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய சி.கே.நாயுடு அந்த ஆண்டு ரஞ்சி சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 84 ரன்கள் குவித்தார். 47 ஆண்டுகளுக்கு மேலாக முதல்தர போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
ஓய்வுக்கு பின்..
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சி.கே.நாயுடு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர், பிசிசிஐ துணை தலைவர் வாணொலி வர்ணனையாளர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆந்திர கிரிக்கெட சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அங்கு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் சி.கே.நாயுடு, சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்துள்ளார்.
இவரின் சிக்சர் அடிக்கும் திறன் இந்தியாவின் கிராமபகுதிகளிலும் இவரை கொண்டு சென்றது. 1933 ஆண்டும் விஸ்டன் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட சி.கே.நாயுடு, 1956-ம் ஆண்டு இந்தியாவின் பத்மபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சி.கே.நாயுடு பிறந்த தினம் இன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.