ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் அணிக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், அது தவறான தகவல் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்து முடிந்திருக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கோலி தலைமையிலான இந்திய அணியிடம் ஆஸி., தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
முந்தைய தொடரில் இலங்கை அணியை இலங்கை மண்ணில் வைத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மொத்தம் நடந்த 9 போட்டிகளிலும் வென்று அந்த அணியை கிளீன் ஸ்வீப் செய்தது இந்தியா. அதே கெத்துடன் அதே நம்பிக்கையுடன் ஆஸி.,க்கு எதிரான தொடரையும் இந்திய அணி துவங்கி வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.
தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், மிடில் ஆர்டர் வீரர்கள் அதை சரி செய்து விடுகின்றனர். மிடில் ஆர்டரும் சொதப்பினால், இறுதிவரை நின்று தோனி அணியை கரை சேர்த்துவிடுகிறார். அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பினால், இந்திய பவுலர்கள் அணியை காப்பாற்றிவிடுகின்றனர்.
இப்படியாகத் தான் இலங்கைக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியையும் சேர்த்து தற்போது வரை வரிசையாக ஏழு ஒருநாள் போட்டியையும் இந்திய அணி வென்றுள்ளது.
இந்தநிலையில், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த இந்திய அணி, நேற்றைய வெற்றிக்குப் பிறகு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், ஐசிசி-யின் அதிகராப்பூர்வ இணையதளத்தில் கொடுத்துள்ள தகவலின்படி, இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணியின் ரேட்டிங் 119-ஆக உயர்ந்தது. முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவின் ரேட்டிங்கும் 119 தான். ஆனால், புள்ளிகள் அடிப்படியில் தென்., 5,957 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இந்தியா 5,599 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 115 ரேட்டிங்குடன் 5,640 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z345-300x217.jpg)