/indian-express-tamil/media/media_files/2025/09/29/asia-cup-2025-09-29-10-13-58.jpg)
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை பெற மறுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கோப்பையை வாங்காமலே வெற்றிக்கொண்டாட்டத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் நிர்ணையித்த 147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்று 9-வது முறையாக ஆசியகோப்பையை வென்றது. இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அணி வீரர்கள், அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். நக்வி நான் தான் கோப்பையை வழங்குவேன் என்று வலியுறுத்தியதால், கோப்பை வழங்கும் விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இறுதியில், கோப்பை வழங்கப்படாமலேயே விழா முடிவுக்கு வந்தது. இந்திய வீரர்கள், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் சரூனியிடம் இருந்து கோப்பையைப் வாங்க தயாராக இருந்த நிலையில், நக்வி அதற்கு சம்மதிக்கவில்லை. தாமதம் நீடித்ததால், அதிகாரிகள் கோப்பையை எடுத்துச் சென்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க மறுத்ததற்கான உடனடித் தூண்டுதல், அவர் 'எக்ஸ்' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் மறுபதிவு செய்த சில படங்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒன்று, "ஃபைனல் டே" என்ற தலைப்பில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி உட்பட பாகிஸ்தான் வீரர்கள் போர் விமானங்களின் பின்னணியில் விமான உடையணிந்து இருப்பது போன்ற புகைப்படம்.
முன்னதாக, இத்தொடரின்போது, நக்வி விபத்துக்குள்ளாகும் விமானத்தைப் போல சித்தரிக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் படத்தையும் பதிவிட்டிருந்தார். போட்டிக்குப் பிந்தைய ஊடகச் சந்திப்பில் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "ஒரு சாம்பியன் அணி கோப்பையைப் பெறாமல் இருப்பதை நான் பார்த்ததில்லை. நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். உண்மையான கோப்பைகள் என் 14 சக வீரர்கள் தான், அவர்கள் என் நினைவில் இருப்பார்கள்," என்று கூறினார்.
இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்தது இது மூன்றாவது முறையாகும். முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா எளிதாக வென்றது. ஆனால், போட்டிக்கு அப்பாற்பட்ட ஒரு பதட்டமான பகைமை காணப்பட்டது. இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்தியா மறுத்துவிட்டது. அப்போது, சூர்யகுமார் யாதவ் அந்த வெற்றியை, 26 பேர் பலியான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குச் சமர்ப்பித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குச் சில நாட்களுக்குப் பிறகு, இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் பதிலடி கொடுத்தது. இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை குறிவைத்ததுடன், ஏப்ரல்-மே மாதங்களில் மூன்று நாட்கள் நீடித்த பதட்டமான ராணுவ நிலைப்பாட்டைத் தூண்டியது. துபாயில், கைக்குலுக்க மறுத்த நிகழ்வுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளைப் பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை நக்வி ஆதரித்தார்.
லாகூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர், "நாங்கள் புறக்கணிப்புக்குச் செல்ல வேண்டியிருந்தால், அது ஒரு மிகப் பெரிய முடிவாகும். இதில் பிரதம மந்திரி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரும் ஈடுபட்டனர், மேலும் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவும் கிடைத்தது. நாங்கள் இந்த விவகாரத்தைக் கண்காணித்து வந்தோம். அரசியலும் விளையாட்டும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். இது விளையாட்டு, விளையாட்டாகவே இருக்கட்டும். கிரிக்கெட் இதிலிருந்து விலகி இருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
நேற்று (செப்டம்பர் 28)இரவு, துபாய் சர்வதேச மைதானத்தில் தனிப்பட்ட விருதுகளை மற்ற பிரமுகர்களிடம் இருந்து பெறுவதற்காக மட்டுமே இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேடை ஏறினர். பின்னர், வீரர்கள் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினர். உண்மையில், போட்டி முடிந்த உடனேயே விருது வழங்கும் விழா தாமதமாகும் என்பதற்கான அறிகுறிகள் இருந்தன. ரிங்கு சிங் வெற்றி ரன்களை எடுத்த பிறகும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேடையை அமைத்த பிறகும் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கடந்துவிட்டன. பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் ஆடை அறைக்குத் திரும்பிவிட்டனர். இந்தியர்கள் மைதானத்தின் ஒரு பக்கத்தில் சிதறி இருந்தனர். எதுவும் நடக்கவில்லை.
பிரச்சனையைத் தீர்க்க அதிகாரிகள் அவசரமாக நடமாடுவதைக் காண முடிந்தது. நடுவர்களும் போட்டி நடுவரும் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் வெளிப்படையாக எந்தப் பலனும் இல்லை. இந்தத் தாமதம் காரணமாக, அரங்கில் இருந்த ரசிகர்களில் பாதியளவுக்கு மட்டுமே மீதமிருந்த நிலையில், அவர்களிடமிருந்து கூச்சல் அதிகம் எழுந்தது. தொலைக்காட்சியில் வர்ணனை செய்த ரவி சாஸ்திரி, ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்புக்காக வீரர்கள் 45 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியது "அபத்தமானது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.