2023-ஆம் ஆண்டு நடக்கவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இன்று(திங்கள்) நடந்த பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகக்கோப்பை மட்டுமல்லாது, 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்தியா நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை முழுமையாக இந்தியா நடத்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னதாக, 1987, 1996, 2011-ல் நடந்த உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தியிருந்தது.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக்கோப்பை மட்டுமல்லாது, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக பங்கேற்கும் டெஸ்ட் தொடரையும் இந்தியா நடத்துகிறது. 2019-2020 காலக்கட்டத்தில் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே முதல் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் 2017-ல் அயர்லாந்து அணியுடன் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியும் ஐசிசி-யின் நிரந்தர உறுப்பினரானது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவுக்கும், ஆப்கானுக்கும் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க உறவை கருத்தில் கொண்டு, இந்தியா அத்தொடரை நடத்த முடிவு செய்திருப்பதாக பிசிசிஐ-யின் இணை செயலர் அமிதாப் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், 2019-23 கால அட்டவணையில் இந்தியா விளையாடும் போட்டிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளின் எண்ணிக்கை 81 ஆகவும், விளையாடும் நாட்களின் எண்ணிக்கை 306 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய கோலி, அதிக போட்டிகளில் விளையாடுவதால் அணியின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக கூறியிருந்ததால், பிசிசிஐ அட்டவணையில் இந்த மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.