இந்த ஸ்கோர் போதுமா? பாகிஸ்தானிடம் தடுமாறிய இந்திய அணி!

இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றிநடை போட்டு வரும் இந்திய அணி, இன்று பாகிஸ்தானிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

முதல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில், தொடரை நடத்தும் நாடான இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இதனால், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவும் 4 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. ஆனால், ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணியை பொறுத்த வரையில், பூனம் ராத், மந்தனா, மிதாலி ராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 20 வயதேயான மும்பை வீராங்கனை மந்தனா அட்டகாசமாக ஆடி வருகிறார். இங்கிலாந்திற்கு எதிராக 90 ரன்கள் விளாசிய மந்தனா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 184 ரன்கள் சேஸிங்கில், 108 பந்துகளில் 106 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதனால், அணியின் முக்கிய வீராங்கனையாக மந்தனா உயர்ந்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தினை பார்த்த இந்திய ரசிகர்கள், மந்தனாவை ‘சேவாக்கின் பெண் பதிப்பு’ என சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்தனர். இது வைரலாக, ஒரு கட்டத்தில் சேவாக் அந்த டீவீட்டிற்கு அவரது ஸ்டைலில் ரிப்ளை செய்தார்.

அதில், ‘அவர் ஸ்ம்ரிதியின் முதல் வெர்ஷன்’ என குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘விளையாட்டை விரும்பும் அனைத்து இந்தியர்களும் நிச்சயம் ஸ்மிரிதி மந்தனாவை விரும்புவார்கள்’ என பதில் ட்வீட் செய்திருந்தார்.

அதேசமயம், பாகிஸ்தான் பெண்கள் அணி, தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. குறைந்தபட்சம், பரம எதிரியான இந்தியாவை இன்று வீழ்த்தியாவது அந்த அணி ஆறுதல் தேட முயற்சிக்கும். இதனால், இன்றைய ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடி ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக பூனம் ராவத் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நஸ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

×Close
×Close