ANBARASAN GNANAMANI
ஒருவர் கிரிக்கெட் ரசிகராக இருப்பது என்பது பரிதாபத்துக்குரியது. கிரிக்கெட் வெறியர்களாக இருப்பது மன அழுதத்திற்குரியது. ஏன் இப்படி? பொதுவாக, ஏதாவது ஒரு விளையாட்டை நேசிக்கும் ஒருவர், தன்னுடைய நாடு அந்த விளையாட்டில் நம்பர்.1 ஆக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அட்லீஸ்ட், தான் பார்க்கும் போட்டியிலாவது, தனது தேசம் தோற்கக் கூடாது என்று வேண்டுவார்கள். ஆனால், அவரது தேசம் தோற்கும் போது, அந்த வலி இருக்கிறதே.... அது அந்த வெறியர்களுக்கே தெரியும். கால்பந்து உலகக் கோப்பையின் போது, தனது அணி விளையாடும் போட்டியை நேரில் காண ஒருவர், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து பார்த்த வரலாறெல்லாம் உள்ளது. இப்படி மடத்தனமான பல சம்பவங்களை செய்து கொண்டிருக்கும் ரசிகர்களை கொண்டிருக்கும் விளையாட்டு கிரிக்கெட். குறிப்பாக, இந்தியாவில்!.
ஃபேன் சுவிட்சை போட்டால் விக்கெட் விழும், தரையில் உட்கார்ந்தால் விக்கெட் விழும், கதவருகே நின்றால் விக்கெட் விழும், டிவி வால்யூமின் எண்ணிக்கையை 5ல் வைத்தால் விக்கெட் விழும்.... இவ்வளவு ஏன், சிறுநீர் கழித்துவிட்டு வந்தால் விக்கெட் விழும் என்ற நம்பிக்கையில், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்த நம்மவர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.
இவ்ளோ தியாகம் பண்ணியும், இந்தியா தோற்றால் எப்படி இருக்கும்? கடந்த பத்து வருடங்களாகத் தான் இந்தியா, உலகின் தலை சிறந்த அணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தோனி எனும் கேணி தான் வெற்றி எனும் நீரை, அடிக்கடி அள்ளித் தெளித்தது. இப்போது, அந்த நீரை லிட்டர் கணக்கில் இறைத்துக் கொண்டிருப்பவர் விராட் கோலி. ஆனால், கேணியைச் சுற்றி தான் தண்ணீர் தெளிக்கிறதே தவிர, அதற்கு வெளியே பாய்ந்து வயல் வெளிகளுக்கு செல்வது என்பது கரடு முரடான பாதையாகவே உள்ளது.
யோவ்... இப்போ என்னதான்யா சொல்ல வறீங்க-னு நீங்க ஆவேசம் அடைவது புரியுது. விஷயத்திற்கு வருவோம்.
நேற்று(சனி) பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி செய்தியாளர்களிடம், பிசிசிஐ எடுத்துள்ள சில அதிரடி முடிவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பொழுது, முதலில் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளை நடத்துவது என்றும், அதன் பிறகே டெஸ்ட் போட்டிகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்தியா இந்தாண்டு, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கையில், முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிறகு, டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்மூலம், இந்திய அணி தொடக்கத்திலேயே குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டை விளையாடுவதால், அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இனிமேல், இந்திய அணி இந்த நடைமுறையையே வெளிநாட்டு தொடர்களின் போது பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா பெரும்பாலும் திணறிக் கொண்டே இருந்தது. இதுவரை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்ற வரலாறே கிடையாது. கோடிகள் கொட்டும் இந்திய அணியால், இன்னும் அங்கு டெஸ்ட் தொடர்களை வெல்ல முடியவில்லை எனில் என்னவென்று சொல்ல!.
உள்நாட்டில் 'பாகுபலி'யாக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் 'பாக்குறவன் பலி' என்ற நிலைமையில் உள்ள இந்திய அணிக்கு இந்த முடிவு நிச்சயம் ஓரளவாவது பயன் தரும். அதேசமயம், அட்லீஸ்ட் சில இந்திய பிட்சுகளையாவது வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்சுக்கும் ஏற்றவாறு மாற்ற வேண்டும். அதில், இந்திய அணி அடிக்கடி விளையாட வேண்டும். அப்போதுதான் வெளிமண்ணில் நம்மால் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியும்.
ஏதோ, இப்போதாவது 'தகவமைத்துக் கொள்ளுதல்' என்ற ஐடியாவுக்கு பிசிசிஐ வந்துள்ளதே என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.