உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், தொடர்ச்சியான 6 வெற்றிகளுடன் இந்திய அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
உலகின் டாப் 10 அணிகள் பங்கேற்றுள்ள மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 2011க்குப் பிறகு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே 2011 போலவே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியான 6 வெற்றிகளுடன், இதுவரை தோற்காத அணியாக வலம் வருகிறது. உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் பிற அணிகள், தடுமாறிக் கொண்டிருக்கையில், சொந்த மண்ணில் விளையாடும் பலத்துடன், இந்திய அணி வெற்றி நடைபோடுகிறது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது 3 ஆவது போட்டியில், பாகிஸ்தானை எதிர்கொண்டது. உலக கோப்பையில் இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை என்ற வரலாறு தொடருமா என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றது வரலாற்றை தக்கவைத்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
4 ஆவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. வங்கதேசம் கடுமையாக போராடினாலும், விராட் கோலியின் சிறப்பான சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி தனது 5 ஆவது போட்டியில், புள்ளிப் பட்டியலில் கடுமையான போட்டி கொடுக்கும் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து வீரர் மிட்செல் சதம் அடித்தாலும், ஷமி 5 விக்கெட் வீழ்த்தி பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் தடுத்தார். மேலும் ரோகித் மற்றும் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து தோற்ற ஒரே அணி இந்தியா தான். நியூசிலாந்து 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
இந்தியா 5 ஆவது போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த உலக கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து, மிக மோசமாக விளையாடி வருகிறது. சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் இன்று நடந்தப் போட்டியில் இந்திய அணியை 229 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து அணி. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் இதுவரையிலான 6 போட்டிகளில் 5ல் தோல்வியுற்று கடைசி இடத்தில் உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற்ற ஒரே அணி வங்கதேசம் தான். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து பலம் குறைந்த ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளிடமும் தோல்வியை தழுவியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம், தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. 12 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.