IND vs AUS ODI: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்டின் வெற்றியை தொடர்ந்து இந்தியா அடுத்த ஒரு நாள் பலப்பரீட்சைக்கு தயாராகுகிறது. 2019 உலக கோப்பைக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
டாப்-ஆர்டர் பலம்
இந்தியாவின் பேட்டிங் பெருமளவு டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களையே நம்பி உள்ளது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி. இந்த மூன்று பெரும் கொடுக்கும் ஸ்டார்ட்டில் தான் ஸ்கோரின் வேகத்தை இந்தியா உயர்த்த முடியும். ஆஸ்திரேலியாவில் இவர்களுக்கு நல்ல ரெகார்ட் உள்ளது. ரோஹித் ஷர்மாவின் ஆவெரேஜ் 79.13; இதில் இவர் அடித்த நான்கு சதங்களும் அடங்கும். தவான் தான் விளையாடிய 15 போட்டிகளில் 644 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் கோலி 23 இன்னிங்சில் 1001 ரன்கள் அடித்திருக்கிறார். இவரின் ஆவெரேஜ் 50க்கும் மேல். இந்த காம்பினேஷனை இந்தியா மாற்ற வாய்ப்பில்லை.
2018ல் தோனியின் பாஃர்ம் படுமோசம்
இந்தியாவின் அடுத்த 'focus' அதன் மிடில்-ஆர்டர் பேட்டிங் தான். மிடில் ஆர்டரில் இந்தியா மிகவும் நம்பி இருப்பது தோனியின் மீது தான். ஆனால், 2018ல் தோனியின் பாஃர்ம் படுமோசம். 20 இன்னிங்சில் 275 ரன்கள் தான் எடுத்துள்ளார். இவரின் ஆவெரேஜ் சென்ற ஆண்டில் 25; இவரது கிரிக்கெட் கேரியரில் இது தான் மோசமான ஆவரேஜ். 2019 உலக கோப்பை தான் தோனியின் கடைசி ஒரு நாள் தொடராக இருக்கும் என்று அனைவரும் கணிக்கும் நிலையில், தனது பேட்டிங் திறனை தோனி மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தோனியுடன் இணைந்து மிடில் ஆர்டரில் களம் இறங்க அம்பட்டி ராயுடுவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. லோகேஷ் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பியதால் மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இரண்டும் வேறு வேறு பார்ஃமெட் என்றாலும், இவரின் வீக்நெஸ் அறிந்த ஆஸ்திரேலியா பௌலர்கள் இவரை எளிதில் தூக்கிவிடுவார்கள். ஆதாலால், இந்திய அணி இவரை தனது முதல் 11 பேர் கொண்ட அணியில் வைத்திருக்காது .
ராயுடுவிற்கு அணியில் இடம் பெற ஏன் வாய்ப்பு அதிகம் என்றால் அவருடைய சமீபத்திய பாஃர்ம் சிறப்பாக உள்ளது. கடந்த வருடம் இவர் ஆடிய 11 போட்டிகளில் 392 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஆறாவது இடத்தை கேதார் ஜாதவ் ஆக்கிரமிக்க வாய்ப்பு அதிகம். இவரின் பேட்டிங் திறனை தவிர்த்து இவரின் யூனிக் ஆப்-ஸ்பின் டெலிவெரிகள் தக்கசமயத்தில் உதவும். இந்தியாவின் ஸீம்-பௌலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் முக்கிய பங்கு வகிப்பார். பெரிய பௌண்டரிகளை கொண்ட ஆஸ்திரேலியா மைதானங்களில் இவரது ஸ்விங் அண்ட் மீடியம் பேஸ் பெரும் உதவியாக இருக்கும். உலக கோப்பை அணியில் இவரது இடம் இந்த தொடரை வைத்து தான் கணிக்கப்படும்.
பும்ரா இல்லாத இந்திய அணி
இந்தியா அணியை பொறுத்தவரை வீரர்களின் பனி சுமையை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று எண்ணுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பும்ரா இல்லாத இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி நிச்சயம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பொதுவாக pace மற்றும் bounce சற்று அதிகமா இருக்கும், ஸ்விங் சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில், இந்தியா ஸ்விங்கை பலமாக கொண்ட புவனேஸ்வர் குமாரை களம் இறக்குமா அல்லது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்பு இணைந்திருக்கும் முகமத் ஷமியை பயன்படுத்துமா என்பது தான் கேள்வி. இந்த இருவரில் ஒருவர்தான் இடம் பெற முடியும். பாஸ்ட் ரெகார்டசை வைத்து புவனேஸ்வருக்கு இந்தியா முன்னுரிமை கொடுக்க வாய்ப்பு உள்ளது. இவர்களை தவிர்த்து இளம் பந்துவீச்சாளர்கள் முகமத் சிராஜ், கலீல் அஹ்மத் அணியில் உள்ளனர். சிராஜ் சமீபத்திய ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும், இடது கை பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத் அணியில் இடம் பெற வாய்ய்பு அதிகம். பேஸ் கூட்டணியை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய பலமாக சமீபகாலங்களில் கருதப்படும் ஸ்பின் கூட்டணியை பார்ப்போம்.
உலக அணிகளை மிரட்டும் இந்தியாவின் சுழல் கூட்டணி
சாஹல்- குல்தீப் கூட்டணி உலக அணிகளை மிரட்டுகிறது. பிப்ரவரி மாதம் சவுத் ஆப்பிரிக்கா தொடரின் பொழுது ஐந்து போட்டிகளில் இந்த கூட்டணி 30 விக்கெட்டுகளை சாய்த்து வரலாறு படைத்தது. 2018ம் ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் குல்தீப் இரண்டாவது இடத்தில் உள்ளார், 2018ல் தான் விளையாடிய 32 போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த பார்ஃமில் குல்தீப் இருப்பது எதிர் அணியை நிலைகுலைய வைக்கும். முதல் போட்டி நடக்கும் சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு பொதுவாக உதவியாக இருக்கும். இந்திய அணியை பொறுத்தவரை சஹால்/குல்தீப் இருவரையும் ஆட வைப்பது சற்று கடினம். ஜாதவும் அணியில் இருக்க. ஒரு ஸ்பின்னர் உடன் இந்தியா செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. சமீபத்தில் சர்ச்சைகளில் சிக்கியுள்ள பாண்டியா அணியில் இடம் பெறாமல் போனால், ஜடேஜாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
திருப்பி கொடுக்குமா ஆஸி?
மறுபக்கம் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆரோன் பின்ச் தலைமையிலான அணி பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார். அலேக்ஸ் கேரி-பின்ச் ஓப்பனிங் காம்பினேஷன் எப்படி செயல்படப்போகிறது என்பதில் தான் தான் ஆஸ்திரேலியாவின் கவனம் இருக்கும்.
மிடில் ஆர்டரில் உஸ்மான் கவாஜா; ஷான் மார்ஷ் மற்றும் பீட்டர் ஹன்ட்ஸ்கோம் கூட்டணி இருக்கிறது. அனுபவம் வாய்ந்த அந்த கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்கும் முக்கிய பொறுப்பை கொண்டுள்ளது. இவர்களை தவிர்த்து ஸ்பின் பௌலிங் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் அணியில் இருக்கிறார். அதிரடி ஆட்டக்காரரான இவர் ஸ்கோரிங் ரேட்டை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பார். இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட பொழுது சிறப்பாக பந்துவீசிய ரிச்சர்ட்சன், பெஹ்ரேன் டாஃப் பேஸ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ப்ரைம் ஸ்பின்னர்ராக செயல்படுவர் நாதன் லியொன். இவர் ஆஸ்திரேலியா ஒரு நாள் அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்பு இணைந்துள்ளார்.
இரண்டு அணிகளும் தங்களின் வியூகங்களை வகுத்து வெற்றி பெரும் முனைப்புடன் களம் இறங்க காத்திருக்கிறது. முதல் போட்டி நாளை சிட்னியில் இந்திய நேரப்படி காலை 7:50 மணிக்கு தொடங்குகிறது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.