/indian-express-tamil/media/media_files/2025/10/18/india-vs-australia-1st-odi-expected-playing-11-head-to-head-perth-pitch-report-weather-forecast-tamil-news-2025-10-18-19-26-21.jpg)
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் முதலாவது ஒருநாள் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி இன்று பெர்த்தில் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India vs Australia 1st ODI: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்தியாவின் ஆடும் லெவன் எப்படி இருக்கும்?
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்தில் இருக்கும் அவரின் தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும். அவரது தலைமையிலான அணிக்கு வலு சேர்க்கும் விதமாக சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்குகின்றனர். ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் ஆடிய இவர்கள், 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர். இதனால், அவர்கள் தங்களது இடத்தில் வழக்கம் போல் மட்டையைச் சுழற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் போன்ற முன்னணி வீரர்கள் தங்களின் அனுபவம் மூலம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார்கள் என நம்பலாம். மேலும், வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாக செயல்படும் சிராஜ் ஆஸ்திரேலிய மண்ணில் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்த ஆவல் கொண்டுள்ளார். அவருடன் இணைந்து பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் வேகப்பந்துவீச்சில் மிரட்டுவார்கள். அத்துடன், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் சுழல் வித்தை காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முயலும். இருப்பினும், ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க உள்ளார். மொத்தத்தில், இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்துடன் காணப்படுவதால், இந்த ஒருநாள் தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறும்.
பெர்த் ஆடுகளம் எப்படி?
பொதுவாக, பெர்த்தில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் உதவும். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 183 ஆகும். அதே நேரத்தில் இந்த மைதானத்தில் துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்கு 153 ஆகும். இதுவரை, பெர்த்தின் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டுள்ளன. அதில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகளே இரண்டு முறை வென்றுள்ளன.
இந்த போட்டிக்கு முன்னதாக பெர்த் ஆடுகளம் பற்றி பேசிய கேப்டன் சுப்மன் கில், "ஆடுகளம் சர்வதேச ஒரு நாள் போட்டிக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கலாம். மேலும் இது ஒரு ஒருநாள் போட்டிக்கு ஒரு நல்ல ஆடுகளம் போல் தெரிகிறது," என்று கூறினார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் வருகை குறித்து கில்-லிடம் கேட்கப்பட்ட போது, 'அணியில் இரண்டு சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்கள் இருப்பது மிகப் பெரிய ஊக்கமாகும். அவர்களின் இருப்பு சந்தேகத்திற்கு இடமின்றி தொடருக்குச் செல்லும் அணிக்கு பயனளிக்கும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகளவில் சிறந்த வீரர்கள். அவர்களின் அனுபவமும் அவர்கள் வழங்கும் குறிப்புகளும் அணிக்கு மகத்தான மதிப்பைச் சேர்க்கின்றன," என்றும் அவர் கூறினார்.
பெர்த்தில் மழை அச்சுறுத்தல்?
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் முதலாவது ஒருநாள் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. போட்டி நாளன்று பெர்த்தில் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி காலை 11:30 மணிக்கு (ஆஸ்திரேலிய நேரப்படி) தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ய 70% வாய்ப்புகள் உள்ளன. ஆட்டம் செல்ல செல்ல மழை மேலும் 35% அதிகரிக்கலாம்." என்று அக்குவெதர் இணையப்பக்கம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி டாஸ் காலை 8:30 மணிக்கும், ஆஸ்திரேலிய நேரப்படி காலை 11 மணிக்கும் போடப்படும். ஆனால், மழை இடையூறு செய்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்படுத்தும். அதனால், ஆட்டம் தொடங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, வருண பகவான் கருணை காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதேநேரத்தில், மழை மற்றும் மேகமூட்டமான சூழ்நிலைகள் ஏற்பட்டால், டாஸ் வென்ற பிறகு இரு அணி கேப்டன்களும் முதலில் பீல்டிங் செய்ய விரும்புவார்கள். ஏனெனில், மேகமூட்டமான சூழ்நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பந்தை ஸ்விங் செய்ய உதவும். அதனால், பவுன்ஸ் அதிகம் இருக்கும் பெர்த் ஆடுகளம் பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும்.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 158 முறை மோதியுள்ள்ன. இதில் ஆஸ்திரேலியா 84 முறையும், இந்தியா 58 முறையும் வென்றுள்ளன. 10 போட்டிகள் முடிவு இல்லாமல் அல்லது சமனில் முடிந்துள்ளன.
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் கிருஷ்ணா, பிரசித் கிருஷ்ணா
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, மேத்யூ ஷார்ட், மாட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.