அடிலைடில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலைடில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. (நாம அவ்வளவு ஸ்டிராங்கா... இல்ல அவங்க அவ்வளவு வீக்கா மொமன்ட்). முதல் இன்னிங்ஸில் புஜாராவின் இன்னிங்ஸ் சேவ் சதத்தால், இந்தியா 250 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சச்சினே, 'எனது கரியரில் இவ்வளவு வீக்கான ஆஸ்திரேலிய அணியை பார்த்ததில்லை' என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும், நம்ம பாய்ஸின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
பின், 2வது இன்னிங்சை இன்று தொடங்கிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து, 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் விக்கெட்டுக்கு முரளி விஜய் - லோகேஷ் ராகுல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. ராகுல் 44, விஜய் 18, கோலி 34 ரன்னிலும் அவுட்டானார்கள். அதிலும், இன்றைய ஆட்டம் முடியும் நேரத்தில் நாதன் லயன் ஓவரில் கேப்டன் கோலி அவுட்டானார்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது முறையாக, நாதன் லயனிடம் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். டெஸ்டில் அதிக முறை கோலியை வீழ்த்தியது அவர் தான்.
6 நாதன் லயன்
5 ஜேம்ஸ் ஆண்டர்சன் / ஸ்டூவர்ட் பிராட்
4 பீட்டர் சிடில் / மோர்னே மோர்கல் / அடில் ரஷித்
கைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன. நாளை நான்காவது நாளில், மேற்கொண்டு அட்லீஸ்ட் 200 ரன்கள் எடுத்தால் 350 - 370 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு நாம் டார்கெட் வைக்கலாம்.
நிச்சயம், இந்த டார்கெட்டை ஆஸ்திரேலியா அடிக்க நினைக்காது. டிரா செய்யும் நோக்கத்துடனேயே விளையாடும். அதனைப் பயன்படுத்தி, நமது பவுலர்கள் நெருக்கடி கொடுத்தால், இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல நல்ல வாய்ப்புள்ளது.