இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், சென்னையில் கடந்த 17-ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிகளின்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று கொல்கத்தாவில் இவ்விரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியே இதிலும் விளையாடுகிறது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஃபால்க்னர் மற்றும் ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு ரிச்சர்ட்சன் மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 19 ரன்களாக இருந்த நிலையில், ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி, ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சீரான வேகத்தில் ரன்கள் எடுத்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 121- 1 என்று இருந்த நிலையில், ரகானே 55 ரன்களில்(64 பந்து, 7 பவுண்டரிகள்) ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் வந்த மணிஷ் பாண்டே 3 ரன்னிலும், கேதர் ஜாதவ், 24 ரன்களிலும் ஆட்டமிழந்தர்.
ஒருபக்கம் விக்கெட்கள் சரிய, மறு முனையில் விராட் கோலி சீரான வேகத்தில் ரன் குவித்தார். எனினும், விராட் கோலி 92 ரன்கள் (107 பந்து, 8 பவுண்டரி) எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். விராட் கோலி அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 197-5 (37.5 ஓவர்கள்) என்றிருந்தது. டோனி 5 ரன்களில் 39.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 204-6 என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. இதையடுத்து, களத்தில் இருந்த ஹர்த்திக் பாண்ட்யாவும், புவேனேஷ்குமாரும் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தனர்.
47.3 ஓவர்கள் முடிந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. ஆட்டம் தொடங்கிய நிலையில் விரைவிலேயே புவனேஷ் குமார் 20 (33 பந்து, 2 பவுண்டரி), குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், ஹர்த்திக் பாண்ட்யா 20 ரன்களிலும்(26 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய நைல், ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்கமுடியாமல் திணறியது. எனினும், கேப்டன் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், ஸ்டீவன் சுமித் 59 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.