இந்தியா - ஆஸ்திரேலிய இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கடந்த 21-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது. நாளை(செப்.,24) இந்தூரில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தா ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்-க்கும் நடைபெற்ற வார்த்தை போர் அடங்கிய மைக் பதிவு தற்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக மேத்யூ வேட், விராட் கோலி டெஸ்ட் தொடரின் போது காயமடைந்து வெளியேறியதைக் கேலி செய்யும் விதமாக சில வார்த்தைகளைப் பேசியுள்ளார்.
அதாவது, இந்தியா முதலில் பேட் செய்துக் கொண்டிருந்த போது, 33-வது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய பந்து ஒன்று எழும்பாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தாழ்வாகச் சென்றது. அதை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பிடிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் பந்தும் அவர் கையில் சரியாக சிக்காமல் சற்று தூரம் சென்றது. இதனையடுத்து ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி கோலியும், ஜாதவ்வும் ஓடினர்.
ஏற்கனவே வெயில் தாங்க முடியாமல் தத்தளித்த வேட், இந்த சிங்கிளைக் காண பொறுக்க முடியாமல் விராட் கோலியிடம் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். அது டெஸ்ட் தொடரில் விராட் கோலி காயமடைந்து வெளியேறியதை கேலி செய்யுமாறு அமைந்ததோடு கோலியின் ஆட்ட உணர்வையும் சாடினார்.
ஸ்டம்ப் மைக்கில் வேட் கூறியதாக வெளியானது என்னவெனில், “நானும் உன்னைப்போல் அழுதிருப்பேன். ஓய்வறைக்குச் சென்று நல்ல அழுகையை அரங்கேற்றியிருப்பேன். உங்களுக்காக எல்லோரும் வருந்த வேண்டும்” என்று அவர் ஓவர் முடிந்து முனை மாறும்போது கோலியிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கு கோலியும் தன் பாணியில் மிகவும் ஆக்ரோஷமாக கையை ஆட்டி ஏதோ பதில் அளித்தார். ஆனால், அவரது வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் சரியாக கேட்கவில்லை. ஸ்டாய்னிஸும் சில வார்த்தைகளைக் கோலியிடம் கூறினார்.
ஆனால், இந்த சம்பவத்தை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க் கடுமையாக சாடியுள்ளார். (2007 டி20 உலகக் கோப்பையில் சேவாக் விட்டுப் பிரித்து மேய்ந்தாரே... அதே ஸ்டுவர்ட் கிளார்க் தான்) அவர் கூறியபோது, "ஒரே ஒரு ரன் தான். இது பெரிய விஷயமா? அவர் மிஸ் ஃபீல்ட் செய்தார், அப்போது அவர் காயமடைந்தாரா இல்லையா என்பது இரண்டாம்பட்சம்தான். நானாக இருந்தால் என் ஆட்டம் பற்றிதான் கவலைப்படுவேனே தவிர, இப்படி எதிரணி மீது பாய மாட்டேன்" என்றார்.
"ஒரு சிறிய புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா?" என்று தான் இந்த விஷயத்தில் நமக்கு கேட்கத் தோன்றுகிறது.
மேத்யூ வேட் - கோலி வார்த்தைப் போரின் வீடியோ கீழே,