மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகள் முடிந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில், இங்கிலாந்திற்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இன்று டெர்பியில் நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் மிகவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மதியம் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை, முதல் இரண்டு போட்டியில் அதிரடி காட்டிய மந்தானா, அடுத்த ஐந்து போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்தது அணிக்கு தற்போது பெரும் பின்னடைவாக உள்ளது. மந்தானா, மீண்டும் ஃபாரமுக்கு திரும்பவேண்டியது அவசியம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பயமில்லாமல் ஆடினால் தான், ஓரளவிற்காவது ரன் எடுக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும். கேப்டன் மித்தாலி ராஜ், தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்திய அணியின் ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்து விட்டால், மிடில் ஆர்டரில் வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வெர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி, ரன்களை சேர்க்க முடியும்.
அதேசமயம், பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி, ஸ்பின் பவுலிங்கையே அதிகம் நம்பி உள்ளது. கோஸ்வாமி போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவால் நெருக்கடி கொடுக்க முடியும்.
ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவான அணி தான் என்றாலும், அந்த அணி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோற்றுள்ளது. இந்தியாவோ தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. எனவே, நம்பிக்கையுடன் "அட்டாக்" மோடில் விளையாடினால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.
மற்றுமொரு குறிப்பிடத்தக்குந்த விஷயம் என்னவெனில், லீக் சுற்றில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக தோல்வி அடைந்தது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டி குறித்து பேட்டியளித்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், "இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய மகளிரணி வெற்றி பெறவும், உலகக்கோப்பையை வெற்றி பெற எனது தனிப்பட்ட வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.