இந்தியாவின் தொடர் ஒருநாள் போட்டி வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல், தொடர்ச்சியாக ஏழு டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியவுக்கு எதிராக வெற்றிப் பெற்று ஆதிக்கம் செலுத்தியதற்கும், நேற்று அழுத்தந்திருத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
நேற்று(செவ்வாய்) குவஹாத்தியில் நடந்த ஆஸி., அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில், முதலில் பேட் செய்த வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 118 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றது.
வெற்றித் தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் தான். அதிலும், யாராலும் துல்லியமாக கணிக்க முடியாத விளையாட்டான கிரிக்கெட்டில் எப்பேற்பட்ட அணியும் தோற்கும், கத்துக்குட்டி அணியும் ஜெயிக்கும். இது கிரிக்கெட்டின் எழுதப்படாத தலைவிதி.
அப்படித் தான் தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியும் நேற்று தோற்றது. அதிலும், உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியிடம் தான் தோற்றது. ஆனால், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இந்திய ரசிகர்கள் சிலர், ஆஸி., வீரர்களின் பேருந்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது இந்திய ரசிகர்களின் நன்னடத்தையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து அணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின் கூட இதற்கு தனது ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெற்ற அசாம் மாநிலத்தின் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, இந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் சில காரணங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியதாவது, "அந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக இருந்தது. முந்தைய நாள் மழையும் பெய்ததால், ஈரமாக இருந்தது. அதனால் தான் பெரும்பாலான விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய பவுலர்கள் கைப்பற்றினார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அணியின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்த நாங்கள் சிறப்பாக முயற்சித்தோம். நீங்கள் போட்டியில் வெற்றிப் பெற வேண்டுமெனில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம். நாங்கள் அதனை செய்ய தவறிவிட்டோம். அவர்கள் எங்களை விட சிறப்பாக பந்துவீசினார்கள் என்று நான் சொல்வேன்.
தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினோம். ஆனால், அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கு யாரையும் கை நீட்டி, 'இவர் தான் தோல்விக்கு காரணம்' என்று உண்மையில் சொல்ல முடியாது. எங்களுக்கு மோசமான நாளாக அது அமைந்துவிட்டது. பெஹ்ரென்டோர்ஃப் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசினார். அந்த விக்கெட்டை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அவருடைய லைன் மற்றும் லெந்த்திற்கு அந்த விக்கெட் அற்புதமாக கைகொடுத்தது. முதல் ஓவரிலேயே, ரோஹித் மற்றும் கோலியின் விக்கெட்டை இழந்தது தான் எங்களுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.