இந்திய கேப்டன் விராட் கோலி 'ரியல் வார்' எனும் களத்தில் தற்போது தான் முதன் முதலாக நுழைந்திருக்கிறார். ஆஸ்திரேலியா எனும் சிங்கத்தை அதன் குகையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் எனும் போரில் சந்திக்கிறார்.
கேப்டனாக விராட் பொறுப்பேற்ற பிறகும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் எதிர்த்து இந்தியா தோல்வியையே கண்டது. தொன்றுதொட்டு வரும் இந்த தோல்விகளை அவ்வளவு சீக்கிரம் இந்திய அணியால் மாற்றிவிட முடியாது. அதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்.
தகவமைத்துக் கொள்ளுதல், இந்திய பிட்ச்களில் சில மாற்றம் செய்தல், சூழியலை வீரர்கள் திறம்பட கையாள பழக்குதல் உள்ளிட்ட பல காரணிகளை நாம் கடந்து வர வேண்டியிருக்கிறது. இவையெல்லாம், சாத்தியமானால் தான் இதுபோன்ற ஆடுகளங்களில் இந்தியாவால் வெற்றிப் பெற முடியும். தொடரை கைப்பற்ற முடியும்.
அப்படிப்பட்ட ஒரு கடினமான தொடரில் தான் விராட் கோலி எனும் கேப்டன் நின்றுக் கொண்டிருக்கிறார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6ம் தேதி அடிலைடில் உள்ள 'அடிலைட் ஓவல்' மைதானத்தில் தொடங்குகிறது. இந்த கிரவுண்டில் இந்தியாவின் டிராக் ரெக்கார்ட் என்ன என்பதையும், வரும் போட்டியில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கும், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பது குறித்தும் மெலிதாய் இங்கே அலசுவோம்.
அடிலைட் ஓவல் மைதானத்தில் இந்தியா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில், ஒன்றில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோற்றுள்ளது. 3 போட்டியை டிரா செய்துள்ளது.
இந்த 11 போட்டியில் அடித்த மொத்த ரன்கள் - 6740
பேட்ஸ்மேன்கள் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை - 14040
ஆவரேஜ் - 33.53
ஓவருக்கு ரன் ரேட் - 2.88
2003ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி மட்டுமே, அடிலைட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸ் என இரண்டிலும் முறையே 233, 72* என மிகச்சிறப்பாக விளையாடி, இந்திய அணியை தனி ஒருவனாக வெற்றிப் பெற வைத்தவர் ராகுல் டிராவிட். அவரது சிறந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தப் போட்டிக்கும் நிச்சயம் இடமுண்டு.
ஆனால், அதன்பிறகு மூன்று முறை இந்த மைதானத்தில் விளையாடிய இந்திய அணிக்கு வெற்றி கிட்டவில்லை. தற்போது வெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், இந்த பிட்சின் Curator டேமியன் ஹாவ் என்ன சொல்கிறார் தெரியுமா?
இந்த ஆடுகளத்தில் ஏதும் புதிதாக மாற்றி அமைக்கப்போவதில்லை. கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் பிங்க் நிற ஆட்டங்கள் தான். அதாவது, பகலிரவு டெஸ்ட் போட்டிகள்.
என்னைப் பொறுத்தவரை பிங்க் பந்தில் விளையாடும் போது இரு நாட்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தில் சிறிது புற்களை விட்டுவிடுவோம். அதேபோன்றுதான் இந்த டெஸ்ட் போட்டிக்கும் புற்களை விட்டுச் செல்வோம். அப்போதுதான் பேட்டிங், பந்துவீச்சு இரு துறைகளும் சமமாகச் செயல்பட முடியும். இல்லாவிட்டால், ஆட்டம் ஒருதரப்பாக அமைந்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
டேமியன் ஹாவின் வார்த்தைகள் மூலம், பிட்ச் 2 நாட்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் ஒத்துழைக்கும் என தெரிகிறது. இருப்பினும், 'காற்றின் மொழி'யைப் பொறுத்து தான் முழுவதுமாய் ஒரு முடிவுக்கு வர முடியும். அதாவது, அடிலைடில் காற்று அடிக்கும் வேகம், திசை, அன்றைய வானிலை ஆகியவை தான் முடிவுகளை தீர்மானிக்கின்றன.
டிசம்பர் 6 அன்று, காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அந்த காலை நேரத்தில், அடிலைடில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவல் இதோ,
வெப்பநிலை - 35 டிகிரி செல்சியஸ்
ஈரப்பதம் - 21 %
காற்றின் வேகம் - 24 km/h
போட்டி நடைபெறும் ஐந்து நாளும் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. லேசான மேக மூட்டத்துடன் வானம் காணப்படும். ஸோ, இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரிசல்ட் கிடைப்பது 90 சதவிகிதம் உறுதி.
மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், இந்தியாவுக்கு நிச்சயம் ஆஸி., பவுலர்கள் தலைவலி கொடுப்பார்கள்.
குறிப்பாக மிட்சல் ஸ்டார்க், ஹேசில்வுட், பீட்டர் சிடில் ஆகிய மூவரும் இந்தியாவுக்கு மிகப் பெரிய Threatening என்றால் அது மிகையல்ல. தற்போது வந்துள்ள பிட்ச் தகவலின் படி, ஸ்பின்னர் நாதன் லயனால் பெரிய அச்சுறுத்தல் இருக்காது என நம்பலாம்.
அதேசமயம், இந்திய பவுலர்களையும் ஆஸ்திரேலிய வீரர்கள் கவனமாக எதிர்கொள்வார்கள் என்பது உறுதி. பும்ராவின் வேரியேஷன்ஸ், ஷமியின் அவுட் ஸ்விங், உமேஷ் யாதவின் வேகம் ஆகிய அம்சங்கள் ஆஸ்திரேலிய வீக் பேட்டிங் லைனை அசைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்த அடிலைட் டெஸ்ட் போட்டி இரண்டு தரப்புக்குமே சோதனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், தற்போதைய பிட்ச் அமைப்பினை வைத்துப் பார்க்கும் பொழுது, டாஸ் வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகிறது.
இங்கு, டாஸ் வெல்லும் அணி நிச்சயம் பவுலிங் தான் தேர்வு செய்யும். அப்படி பவுலிங் செய்யும் பட்சத்தில், புற்கள் அதிகம் கொண்டிருக்கும் பிட்சை பயன்படுத்தி, எதிரணி பேட்ஸ்மேன்களை மிரள வைக்க முடியும். ஒருவேளை இந்தியா டாஸ் வென்றால், அது நிச்சயம் நமக்கு லக் தான். ஏனெனில், ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தற்போது வீக்காக உள்ளது. குறிப்பாக லோ ஆர்டர் வலுவிழந்து உள்ளது.
எனவே, தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், இறுதியில் அணியை தாங்கிப் பிடிக்கும் வீரர்கள் அங்கு இல்லை. அதுமட்டுமின்றி, 3வது நாளுக்கு பிறகு, பேட்டிங்கிற்கு இந்த பிட்ச் கைக் கொடுக்கும் என கூறியிருப்பதால், நமது வலிமையான பேட்டிங் கொண்டு, ஆஸ்திரேலியாவின் டேஞ்சரஸ் பவுலிங்கை சமாளிக்க வாய்ப்புள்ளது. இந்த காரணிகளையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது, ஆஸ்திரேலியாவை இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீழ்த்த அபாரமான வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு கோலி டாஸ் வெல்ல வேண்டும்!.
-அன்பரசன் ஞானமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.