இந்தூரில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது.
அதேசமயம், எந்தவித போராட்டமும் இன்றி தொடரை இழந்தால், அது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால், இந்தூரில் மிகவும் தீவிரமான வலைப்பயிற்சியில் ஆஸி., வீரர்கள் ஈடுபட்டனர்.
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. கார்ட்ரைட் மற்றும் மேத்யூ வேட்-க்கு பதிலாக அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ச் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஆஸி., அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், ஃபின்ச்சும் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்த்தது. வார்னர் 42 ரன்களில் பாண்ட்யா பந்துவீச்சில் போல்டானார். சிறப்பாக ஆடிய ஃபின்ச் சதம் விளாசினார். இது அவருடைய எட்டாவது ஒருநாள் சதமாகும். குல்தீப் வீசிய 37.5-வது ஓவரில் ஃபின்ச் 124 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸ் லைனில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு செட் பேட்ஸ்மேனான கேப்டன் ஸ்மித் 63 ரன்களில் குல்தீப் ஓவரில் கேட்ச் ஆனார். அடுத்த சில நிமிடங்களில் சாஹல் ஓவரை இறங்கி ஆட நினைத்த மேக்ஸ்வெல், பந்தை மிஸ் செய்ய, மீண்டும் ஒருமுறை தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 5 ரன்னில் நடையைக் கட்டினார். இதன்பின் ஸ்டாய்னிஸ் மட்டும் 27 ரன்கள் எடுத்தார். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தைப் பார்த்த போது அந்த அணி 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி பத்து ஓவர்களில் மிகவும் சிக்கனமாக வீசி, 293 ரன்களுக்கு ஆஸி., அணியை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய ரோஹித் ஷர்மா 62 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் ஒரு 103மீ சிக்ஸர் உட்பட நான்கு சிக்ஸர்களும் ஆறு பவுண்டரிகளும் அடங்கும். ரஹானேவும் சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின் கேப்டன் விராட் கோலி 28 ரன்களிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், எது நடந்தால் எனக்கென்ன என்பது போல் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசி 72 பந்துகளில் 78 குவித்தார். இறுதியில், 47.5-வது ஓவரில் இந்திய அணி 294 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மனீஷ் பாண்டே 36 ரன்களுடனும், தோனி 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸி., தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதன்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.