இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 4-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது ஒருநாள் போட்டிகளில் வென்று வெற்றிநடை போட்டு வந்த இந்திய அணிக்கு பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் பெற்ற தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், ஏற்கனவே இந்திய அணி 3-1 என தொடரைக் கைப்பற்றிவிட்டதால், இன்றைய போட்டியின் முடிவுகளால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று மாற்றங்களாக ஷமி, உமேஷ் யாதவ், சாஹல் நீக்கப்பட்டு பும்ரா, புவனேஷ் குமார் மற்றும் குல்தீப் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஃபின்ச், கடந்த இரு ஆட்டங்களைப் போலவே இப்போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 66 ரன்கள் எடுத்தனர். ஃபின்ச் 32 ரன்னில் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார்.
4-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வார்னர், இப்போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பின் ஸ்மித் 16 ரன்னில் கேதர் ஜாதவ் பந்தில் எல்பி ஆக, தொடர்ந்து வார்னர் 53 ரன்னில் கேட்ச் ஆனார். டிராவிஸ் 42 ரன்களும், ஸ்டாய்னிஸ் 46 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு நன்றாக ஆடினர். இறுதிக் கட்டத்தில் ரன்கள் குவிக்க முடியாததால், அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 242-9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அக்ஷர் படேல் 10 ஓவர்கள் வீசி, 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ரஹானே தொடர்ந்து மூன்றாவது முறையாக 100+ பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 61 ரன்னில் ரஹானே அவுட்டாக, அவ்வப்போது சிக்ஸர்களை பறக்கவிட்டு வந்த ரோஹித், தனது 14-வது ஒருநாள் சதத்தை(125) பூர்த்தி செய்தார். கோலி 39 ரன்கள் எடுத்து பக்கபலமாக நிற்க, இந்திய அணி 42.5-வது ஓவரில் 243 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
இதன்மூலம் இந்திய அணி, 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. கடந்த போட்டியில் அடைந்த தோல்வியால், ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்திய அணி, இன்றைய வெற்றியின் மூலம் மீண்டும் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி அக்டோபர் 7(சனி) அன்று நடைபெறுகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது ஒருநாள் போட்டியின் சில சுவாரஸ்ய தகவல்கள்:
*ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொண்டார் 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா. 162 ஆட்டங்களில் விளையாடி இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.
* 'உலக சாம்பியன்' ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுவது என்றாலே, ரோஹித் குஷியாகிவிடுகிறார். ஆஸி., அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இன்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 6 சதங்களை அந்த அணிக்கு எதிராக விளாசியுள்ளார். முதல் இடத்தில் 9 சதங்களுடன் நம்ம சச்சின் உள்ளார்.
* இத்தொடரில் மூன்று போட்டிகளில் இந்திய கேப்டன் கோலி டாஸ் இழந்துள்ளார். ஆனால், கெத்தாக 4-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது டீம் இந்தியா.
* இன்றைய போட்டியையும் சேர்த்து அஜிங்க்யா ரஹானே தொடர்ச்சியாக நான்கு அரைசதம் விளாசியுள்ளார்.
* ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 55 சிக்ஸர்களை விளாசியுள்ளார் ரோஹித்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.