. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 274 ரன்களை எடுக்க, பாகிஸ்தான் 348 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து, 2வது இன்னிங்சில் 60/4 என்று தடுமாறிய போது கேப்டன் கேன் வில்லியம்சனும், ஹென்றி நிகோலஸும் மிக அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வில்லியம்சன் 139 ரன்களை எடுக்க, ஹென்றி நிகோல்ஸ் 126 ரன்களைக் குவிக்க, இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 212 ரன்களை திரட்டினர்.
இதனையடுத்து நியூஸிலாந்து அணி இன்று 353/7 என்று டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. ஆனால், நியூசிலாந்து அறிமுக வீரர் வில்லியம் சோமர்வில் ஒரே ஓவரில் ஹாரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக்கை வெளியேற்ற, பாகிஸ்தான் ஆட்டம் கண்டது. அதன்பின், 156 ரன்களுக்குச் சுருண்டு பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை அயல் மண்ணில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் 2-1 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.
. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலைடில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய பவுலர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில், புஜாரா சதத்தால் 250 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
நம்ம ரவிச்சந்திரன் அஷ்வின், 33 ஓவர்கள் வீசி, வெறும் 50 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை ஆட்டம் காண வைத்துள்ளார். இஷாந்த், பும்ரா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
கைவசம் 3 விக்கெட்டுகளே மீதமிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா இந்தியாவை விட 59 ரன்கள் பின் தங்கியுள்ளது. நாளை விரைவில் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்துவிட்டு, 2ம் இன்னிங்ஸில் 300-350 ரன்கள் எடுத்திவிட்டால், நிச்சயம் அடிலைடில் இந்தியாவுக்கு உறுதி தான்.