ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று மைதானத்திற்கு வெளியே உள்ள டிக்கெட் கவுன்டர்களில் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு கவுன்டர்களில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. எனவே, எப்படியாவது டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ரசிகர்கள் காலை முதலே மைதானத்தின் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
டிக்கெட் விலையானது, ரூ.1200 ரூ.4,800, ரூ, 4,800, ரூ.8,000 மற்றும் ரூ.12,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான ரசிகர்கள் குறைந்தபட்ச விலையான ரூ.1200 டிக்கெட் வாங்கவே ஆர்வம் காட்டினர். எனினும், அதற்கான ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. மேலும், பெண்களுக்கென தனி கவுன்டர் மற்றும் தனிவரிசை ஏற்படுத்தப்படவில்லை என்பதால், பெண்கள் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இணையதளத்தில், டிக்கெட் விற்பனையானது 5 நிமிடத்தில் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கூறும்போது, முன்னதாக ரூ.750 என இருந்த டிக்கெட் விலை தற்போது ரூ.1500-யாக அதிகரித்துள்ளது என்று வருத்தம் தெரிவித்தனர். எனினும், டிக்கெட்டை ஆர்வத்துடன் ரசிகர்கள் வாங்கிச் சென்றனர்.