இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியியை டெஸ்ட். ஒருநாள், டி20 தொடரில் என அனைத்து தொடரிலும் வாஷ்-அவுட் செய்தது. 5-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5-0 என்ற கணக்கிலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்று அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 2-வது ஒருநாள்போட்டி 21-ம் தேதி கொல்கத்தாவிலும். 3-வது போட்டி 24-ம் தேதி இந்தூரிலும், 4-வது போட்டி பெங்களூருவிலும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 1-ம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ கடந்த 10-ம் தேதி வெளியிட்டது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா(துணை கேப்டன்), எம்.எஸ் டோனி, ஷிகர் தவான், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரஹானே, லோகேஷ் ராகுல், புவனேஷ்குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம் பெற்றனர்.
இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்ற சர்துல் தாகூர் நீக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பெற்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இருந்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ளார். அவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் இருந்து ஷிகர் தவான் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் ஷிகர் தவானின் தாயார் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஷிகர் தவான் 4-வது இடம் பிடித்திருந்தார். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷிகர் தவான் 190 ரன்கள் குவித்திருந்தார். முதலிடம் பிடித்த கேப்டன் விராட்கோலி 5 போட்டிகளில் 330 ரன்களும், 2-வது இடம் பிடித்த ரோகித் சர்மா 5 போட்டிகளில் 302 ரன்களும், 3-வது இடம் பிடித்த ஏஞ்சலோ மேத்திவ்ஸ் 5 போட்டிகளில் 192 ரன்களும் எடுத்து பட்டியலில் இடம்பிடித்திருந்தனர்.
இலங்கைக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸில் விளையாடிய ஷிகர் தவான் 358 ரன்கள் எடுத்திருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியவில் ஷிகர் தவான் முதலிடம் பிடித்திருநதார் என்பது கவனிக்கத்தக்கது.
சமீப காலமாக நல்ல ஃபார்ம்மில் இருக்கும் ஷிகர் தவானின் விலகல் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஷிகர் தவானுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக ராகனே களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரராக ரகானாவே 3-வது சாய்ஸாக இருக்கிறார் என விராட் கோலி முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-ஆஸ்திரேலியா...ஒருநாள் தரவரிசையில் முதலிடம் யாருக்கு?