இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோதுகிறது. முதல் போட்டி வரும் 17-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியும் சேப்பாக் மைதானத்தில் நேற்று முதல் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. நாளை (செவ்வாய்) ஆஸ்திரேலிய அணி இந்திய ஏ அணியுடன் பயிற்சிப் போட்டியில் மோதுகிறது.
இந்த நிலையில், பயிற்சிக்குப் பின் பேட்டியளித்த ஆஸி., கேப்டன் ஸ்மித், "கோலிக்குள்ள வேறுபாடுகள் குறித்து நான் கவலைப்படவில்லை. நிச்சயமாக அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். ஒருநாள் போட்டிகளில் அபாரமான சாதனைகளை தன்வசம் அவர் வைத்திருக்கிறார். இந்தத் தொடரில் கோலியை நாங்கள் அமைதிப்படுத்துவோம் என நம்புகிறோம். அவரை அமைதிப்படுத்திவிட்டால் இந்திய அணியை எளிதில் வீழ்த்திவிடலாம். இதன் மூலம் இந்த நீண்டத் தொடரில் நாங்கள் வெற்றிப் பெற முடியும்.
இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்த மிகக் கடுமையாக போராட வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும், இந்தியாவில் சவால் நிறைந்த சூழலில் விளையாட நாங்கள் ஆவலாக உள்ளோம். கடைசியாக இந்தியாவில் நாங்கள் ஒருநாள் தொடரில் விளையாடிய போது அதிக அளவிலான ரன்கள் இரு அணிகளின் சார்பிலும் குவிக்கப்பட்டன. அதுபோன்று இந்தத் தொடரும் அமையும் என நினைக்கிறேன்.
இந்திய அணியில் அக்ஷர் படேல் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அதுபோல் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் பெஸ்ட் ஸ்பின்னர்கள் தான். அஷ்வின், ஜடேஜா இல்லாவிட்டாலும், இந்திய அணி வலிமையாகவே உள்ளது.
எங்கள் அணி குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் சற்று தடுமாறுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் எங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம். வங்கதேசத்திற்கு எதிரான ஒரு கடினமான, சவாலான தொடரை விளையாடிவிட்டு நாங்கள் வந்திருக்கிறோம். இதனால், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொண்டு, இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்போம்" என்றார்.