ANBARASAN GNANAMANI
நிடாஹஸ் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் இன்று மல்லுக்கட்ட உள்ளன. அதீத நம்பிக்கையுடன் உள்ள வங்கதேசமும், எப்போதும் போல் கேஷுவல் கிரிக்கெட்டை ஆடிவரும் இந்தியாவும் மோதும் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தொடர் தொடங்கும் முன்பு, ரசிகர்களுக்கு பெரிதான எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால், வங்கதேச அணியின் மாஸ் பெர்பாமன்ஸ், 'நாகினி' டான்ஸ், இலங்கை அணியுடனான 'களேபரம்' போன்றவை தொடரை சூடு பிடிக்க வைக்க உதவியது. குறிப்பாக, முதன் முதலாக ஒரு சர்வதேச கிரிக்கெட்டை தொடரை சோதனை முயற்சியில் நடத்திய 'டிஸ்கவரி டிவி' நிறுவனத்தின் 'டி ஸ்போர்ட்' சேனலுக்கு அதிக பார்வையாளர்களை ஏற்படுத்தி கொடுத்த பெருமை வங்கதேசத்தையே சாரும். இலங்கை நடத்தும் இந்தத் தொடரை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்த, இலங்கை தொழிலதிபர்கள் வயிற்றில் பாலை வார்த்த பெருமையும் வங்கதேச அணியையே சாரும். இலங்கையால் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியவில்லை என்றாலும், வங்கதேசத்தை பழி வாங்க, இலங்கை ரசிகர்கள் திரளாக வந்து இந்திய அணியை இன்று ஆதரிப்பார்கள் என்று இலங்கை வாரியமும், விளம்பரதாரர்களும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
சரி! விஷயத்திற்கு வருவோம். கொழும்புவில் இன்று இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், அங்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் மற்றும் மாலைப் பொழுதின் தொடக்கத்தில், இடியுடன் மழை பெய்ய 50 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக இலங்கை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதேசமயம், ஒரு ஆறுதல் விஷயம் என்னவெனில், இந்த மழை அச்சுறுத்தல் இத்தொடர் முழுவதும் ஒவ்வொரு போட்டிக்கும் இருந்து வந்தது. ஆனால், எந்தப் போட்டியும் பாதிக்கவில்லை. ஒரேயொரு போட்டி மட்டும் 19 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
ஒருவேளை, இன்று போட்டி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளது. காயத்தால் அவதிப்பட்ட ஜெயதேவ் உணட்கட் தற்போது ரெக்கவரி ஆகியிருக்கிறாராம். இதனால், அவர் இன்றைய போட்டியில் முகமது சிராஜுக்கு பதில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பிட்ச் ஸ்லோவாக இருப்பதால், கூடுதலாக ஒரு ஸ்பின்னரை சேர்க்க நினைத்தால் அக்ஷர் படேலை சேர்க்கலாம். ஆனால், ஸ்பின் பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் போக மூன்றாவது ஆப்ஷனாக ரெய்னா உள்ளார். சுந்தரும், ரெய்னாவும் வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள், சாஹல் வலது கை லெக் ஸ்பின்னர். வங்கதேசத்தில் தமீம் இக்பால், சௌமியா சர்கர், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள். மற்ற நான்கு முக்கிய பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களே. ஆகையால், 'சுந்தர், சாஹல், ரெய்னா' கூட்டணி சுழலுக்கு போதுமானதாகும். வேகப்பந்து வீச்சுக்கு தாகுர், விஜய் ஷங்கர் உள்ளனர். எனவே, ஒரேயொரு மாற்றமாக சிராஜ் நீக்கப்பட்டு உணட்கட் மட்டும் இன்று அணிக்கு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களை அதிகம் வெளிப்படுத்தாமல், அதீத தன்னம்பிக்கையுடன் ஆடாமல், வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே கொண்டாடாமல் இருந்தால், வங்கதேசம் இன்று இந்தியாவை வீழ்த்த முடியும்! இதில் ஒன்று மிஸ் ஆனாலும்.... ஆண்டவனாலும் அந்த அணியை காப்பாற்ற முடியாது!.