ANBARASAN GNANAMANI
முதலில் நிடாஹஸ் டிராபி முத்தரப்பு தொடருக்கு ஒரு நன்றி! வாஷிங்டன் சுந்தரை நன்கு அடையாளப்படுத்தியது. 'வங்கதேச டி வில்லியர்ஸ்' சபீர் ரஹ்மானை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் சென்றது. குறிப்பாக, இந்தியா - இலங்கை ரசிகர்கள் இடையே ஒரு நல்ல இணக்கத்தை அமைத்து கொடுத்தது.
கொழும்புவில் நேற்று நடந்த முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆனால், கைக்கு கிடைத்த கோப்பையை வங்கதேசம் இழந்திருப்பதாகவே நம்மால் கருத முடிகிறது.
சரியாக ஐந்து ரன் அவுட்கள்!. அவையனைத்தும் மிக எளிய வாய்ப்புகள். அனைத்தையும் வீணடித்தது வங்கதேசம். நீங்கள் என்ன தான் திறமையான வீரர்களை வைத்திருந்தாலும், ஸ்பாட்டில் என்ன செய்கிறீர்களோ, அதுதான் முடிவை தீர்மானிக்கும். நேற்று, ஸ்பாட்டில் 'ஹாட்' காட்டினாலும், 'வாட்' எ புவர் பீல்டிங்! என்ற பெயர் எடுத்ததால் தான் வங்கதேசம் தோற்றது.
முதலில் டாஸ் வென்ற ரோஹித், பவுலிங்கை தேர்வு செய்தார். நல்ல முடிவு. முன்னனுபவம் இல்லாத ஃபாஸ்ட் பவுலிங் கேங்கை வைத்துக் கொண்டு, எதிரணியை சேஸ் செய்ய விடுவது மிகவும் ஆபத்தானது. வழக்கம் போல் பவர்பிளேயில், வாஷிங்டன் சுந்தர் லிட்டன் தாஸை காலி செய்ய, அடுத்த ஓவரிலேயே தமீம் இக்பாலுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார் சாஹல். அதே ஓவரில் சௌமியா சர்கரையும் 1 ரன்னில் வெளியேற்றினார். இதில் தமீம் அவுட்டான கேட்ச் 'வாவ்' ரகம் எனலாம். சிக்ஸருக்கு சென்றுக் கொண்டிருந்த பந்தை லாங்-ஆன் எல்லையில் நின்றுக் கொண்டிருந்த ஷர்துள் தாகுர் 'ஐபிஎல்' ஸ்டைலில் சிறப்பாக ஃபூட் ஒர்க் செய்து, தனது எடையை அசாத்தியமாக சமாளித்து, கேட்ச் பிடித்து அசத்தினார்.
ஆக, மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் வங்கதேசம் இழந்த போது, அந்த அணியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 33-3.
இதன்பின், சபீர் ரஹ்மான் ஆட்டத்தை தன்வசம் கையில் எடுத்துக் கொண்ட விதம் கொள்ளை அழகு. சரியாக 15 நாட்களுக்கு முன்பு, சபீர் ரஹ்மானை 'வங்கதேசத்தின் டி வில்லியர்ஸ்' என்று ஒரு செய்தியில் நமது ஐஇதமிழ்-ல் குறிப்பிட்டு இருந்தோம். அதை, 75 சதவிகிதம் அவர் நிறைவேற்றி இருப்பதாகவே பார்க்கிறேன். ஷார்ட்களை தேர்வு செய்வதில் அதிக முன்னேற்றத்தை காண முடிந்தது அவரிடம். முன்பெல்லாம், களத்தில் இறங்கிய உடனேயே, அதிரடி காட்டத் தொடங்கி, 18 ரன்களுக்கு மேல் நிற்கமாட்டார். ஆனால் நேற்று, அதுவும் இறுதிப் போட்டியில் அவரது இயல்பான இன்னிங்ஸ் வெளிப்பட்டதை கிரிக்கெட் ரசிகனாக ரசிக்கவே முடிந்தது.
இன்னும் கொஞ்சம் தன்னை நிரூபித்து விட்டால், ஐபிஎல்-ல் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக சபீர் ரஹ்மான் வலம் வருவார் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, கேப்டன் ஷகிப் அல் ஹசன் என யாரும் களத்தில் அதிக நேர நிற்க முடியாமல் போக, தனியாக நின்றுக் கொண்டிருந்த சபீரும் 50 பந்துகளில் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். கிட்டத்தட்ட 52 ரன்களை இவற்றிலேயே விளாசினார்.
இறுதிக் கட்டத்தில் பவுலிங் ஆல் ரவுண்டர் மெஹ்டி ஹசனிடம் சிக்கினார் ஷர்துள் தாகுர். ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி உட்பட அவர் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்களை கொடுத்தார். முதல் போட்டியில் தமீம் இக்பாலிடம் சிக்கி சின்னாபின்னமாகிப் போன தாகுர், நேற்று ஒரு பவுலிங் ஆல் ரவுண்டரிடம் சிக்கி சிதைந்து போனார்.
விஜய் ஷங்கர் - 48, தாகுர் - 45 ரன்கள் என மொத்தம் 93 ரன்களை இவ்விரு பவுலர்களும் விட்டுக் கொடுத்தனர்.
இவர்களை இங்கு பெரிதாக குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், போட்டி ஆரம்பிக்கும் முன்னர் மீடியம் பவுன்ஸ் பந்திற்கு நல்ல எபெக்ட் இருக்கும் என ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. இதனால், பெரும்பாலும் இவர்கள் ஸ்லோ பவுலிங் உத்தியையே கடைபிடித்தனர். ஆனால், சபீர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டும், சாஹல் 4 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இப்போது இந்தியாவுக்கு இலக்கு 167.
ஹை பாசிட்டிவ் எனர்ஜியோடு களமிறங்கினர் ரோஹித்தும், தவானும். இரண்டாவது ஓவரை வீசிய மெஹ்தி ஹசன் ஓவரில் 6,4,6 என ரசிகர்களை பரவசப்படுத்தினார் ரோஹித். ஆனால், தவான் 10 ரன்னில் வெளியேறிய பின், ரெய்னாவை இறக்கியதற்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கொடுத்து பயன்படுத்தி பார்த்திருக்கலாம் என்பது நமது கருத்து. ரெய்னா 0 ரன்னில் அவுட்டானதற்காக இதைச் சொல்லவில்லை. 167 என்பது மிகப்பெரிய டார்கெட் இல்லை. ரோஹித்தும் அதிரடியாக ஆடி வந்தார். செகண்ட் இன்னிங்ஸில் பேட்டிங் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது. இதனால், சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றுத் தோன்றியது.
ஆனால், லோகேஷ் ராகுல் 24 ரன்னில் அவுட்டான பின், சுமாராக சென்றுக் கொண்டிருந்த அணியின் ஸ்கோர் வேகம் சுத்தமாக முடங்கியது. அரைசதம் அடித்த ரோஹித்தும் பந்துகளை விளாச முடியாமல் தவித்தார். 56 ரன்னில் அவரும் அவுட்டாக, ஆட்டம் வங்கதேசம் பக்கம் சாய்ந்தது. ரோஹித் அவுட்டான பின், களமிறங்கிய விஜய் ஷங்கர் அடித்த ஸ்வீப்-புல் ஷார்ட் மூலம் கிடைத்த பவுண்டரி தான், இந்திய அணிக்கு 30 பந்துகளுக்கு கிடைத்த முதல் பவுண்டரியாகும்.
பின்னர், மனீஷ் பாண்டே கியரை மாற்றினாலும், வங்கதேச பவுலர்கள், ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். இந்நிலையில், 18வது ஓவரை வீச வந்தார் முஸ்தாபிசூர் ரஹ்மான். வரிசையாக நான்கு கட்டர் பந்துகள். அனைத்தும் டாட் பால். 5வது பந்தில் ஒரு சிங்கிள் கிடைக்க, கடைசி பந்தில் மனீஷ் பாண்டே அவுட்.
அடுத்து அரங்கேறிய சம்பவங்களை நான் தொகுக்க தேவையே இல்லை. தினேஷ் கார்த்திக்... இந்த மனிதரைப் பற்றி கடந்த மார்ச் 4ம் தேதி ஐஇதமிழ் வெளியிட்டிருந்த சிறப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில வரிகள் இவை...
"ஷாட்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்… இந்த வரிகளை கொண்டாட உரிமை கொண்ட உலகின் சில கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். திறமை, செயல்பாடு, களத்தில் ஒழுக்கம் என அனைத்தும் ஒருசேர இருந்தும், ஆளுமை என்பது இவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இப்போது அதற்கு சரியான தீனி கிடைத்துள்ளது. 2004ம் ஆண்டில் 18 வயதில் தோனியால் காணாமல் போன தினேஷ் கார்த்திக்கிற்கு, 32 வயதில் மீண்டும் சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. காலம் மாறுகிறது. காட்சிகளும் தற்போது மாறியிருக்கிறது".
இதற்கு மேல் நேற்றைய தினேஷ் கார்த்திக்கின் மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் பற்றி விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.
இறுதியாக, ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். விஜய் ஷங்கரால் நேற்று 18வது ஓவரில் வரிசையாக 4 பந்துகளை அடிக்க முடியாமல் போனது. இறுதி ஓவரிலும் அவர் ஒரு டாட் பால் வைத்தார். தினேஷ் கார்த்திக் அடித்து ஜெயிக்கப் போய், விஜய்யின் மீதான ரௌத்திரம் ரசிகர்களுக்கு குறைந்தது.
ஆனால், இதற்காக விஜய் ஷங்கர் வருத்தப்படவே தேவையில்லை. ஏன் தெரியுமா?
2014...வங்கதேசத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. இந்தியாவின் 'மெகா அதிரடி புயல்' யுவராஜ் சிங் களத்தில் நிற்கிறார். அவர் சந்தித்த பந்துகளின் எண்ணிக்கை 21. ஆனால் அடித்த ரன்கள் 11. ரசிகர்களை 'வெளியே போ.. வெளியே போ..' என்று கூச்சலிட்டனர். இத்தனைக்கும் இந்தியா முதல் பேட்டிங் செய்தது.
2018... நேற்று இலங்கையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 'புதுமுகம்' விஜய் ஷங்கர் 19 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் எடுக்கிறார். அதுவும் பதட்டம் நிறைந்த சேஸிங்கில்..
'எனது அதிரடி இம்முறை எடுபடாமல் போய்விட்டது. இதற்காக நான் ரசிகர்களிடம் வருத்தும் தெரிவித்துக் கொள்கிறேன்' - 2010 டி20 உலகக் கோப்பைத் தொடரின் போது, உச்சக்கட்ட பீக்கில் இருந்த தோனியின் வார்த்தைகள் இவை.
ஆக, கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பதெல்லாம் சர்வ சாதாரணம். பெரிய ஜாம்பவான்கள் கூட சில போட்டிகளில் மிக மோசமாக சொதப்பியுள்ளனர். எனவே, விஜய் ஷங்கர் இதை நினைத்து வருத்தப்படாமல், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தன் மீதுள்ள களங்கத்தை விளாசும் பொருட்டு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
அதுமட்டுமின்றி, "ஆர்ப்பாட்டங்களை அதிகம் வெளிப்படுத்தாமல், அதீத தன்னம்பிக்கையுடன் ஆடாமல், வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே கொண்டாடாமல் இருந்தால், வங்கதேசம் இன்று இந்தியாவை வீழ்த்த முடியும்! இதில் ஒன்று மிஸ் ஆனாலும்…. ஆண்டவனாலும் அந்த அணியை காப்பாற்ற முடியாது!." என நேற்று நமது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.
ஆனால், ஆட்டம் முடிவதற்கு முன்பே பாம்பு படமெடுத்து ஆடியது.. இறுதியில் மிதிபட்டு போனது!.
விதி வலியது!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.