இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் மோசமான தோல்வியால், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதான விமர்சனம் ஓகே ரகம். அவர்கள் மீதான விமர்சனங்களில் நியாயம் உள்ளது. அதில், விராட் கோலி, ஓப்பனாக ரசிகர்களிடம் மன்னிப்பும், 'மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள், எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துவிட்டார்.
ஆனால், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் எவ்வளவோ விமர்சித்தும், இதுவரை கோச் ரவி சாஸ்திரி வாய் திறக்கவில்லை. எதற்கும் பதில் சொல்லவில்லை. பேச்சுகளுக்கு ரிப்ளை கொடுப்பதைவிட, போட்டியில் ரிப்ளை கொடுக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரோ என்னவோ!..
இந்நிலையில், நாளை மறுநாள்(ஆக.18) 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில், இவரை தூக்கிட்டு அவரை கொண்டுவாங்க, அந்த பிளேயரை தூக்கிட்டு இவரைப் போடுங்க-னு ரசிகர்கள் பிசிசிஐக்கு மனு போடாத குறையாக அறிவுரை சொல்ல, வழக்கம் போல, 'என் வழி தனி வழி' என்று உள்ளது இந்திய அணி நிர்வாகம்.
இது ஒருபக்கமிருக்க, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்கான அதிகபட்ச வாய்ப்புகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்,
ஒப்பனிங் பார்ட்னர்ஷிப்:
பத்து வருடங்களுக்கு முன்பு இந்திய அணியின் ஒப்பனின் பார்ட்னர்ஷிப் என்பது அதிபயங்கரமான ஒன்றாக இருந்தது. ஷேவாக் - கம்பீர் என்ற சிறந்த Pair இந்திய அணிக்கு கிடைத்தது. ஆனால், இப்போது இந்தியாவின் பெஸ்ட் Opening Pair என்று நம்மால் எளிதில் யாரையும் குறிப்பிடவே முடியவில்லை. அது உள்நாடாக இருந்தாலும் சரி... வெளிநாடாக இருந்தாலும் சரி. டெஸ்ட் போட்டிகளில் நமது ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். தவான் - விஜய், லோகேஷ் ராகுல் - விஜய், லோகேஷ் ராகுல் - தவான் என்று தான் மாற்றி மாற்றி இந்திய நிர்வாகம் சோதனை செய்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ரில்சட் என்னவோ சோகம் தான்.
இந்த இங்கிலாந்து தொடரில், முதல் போட்டியில் தவான் - விஜய் ஒப்பனிங் இறங்கினர். ஆனால், தவான் சொதப்ப, லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டு, ராகுல் ஒப்பனிங் கொண்டுவரப்பட்டார். ஆனால், இரு டெஸ்ட்டிலும் முரளி விஜய் எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக, லார்ட்ஸ் டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸிலும் 0 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கினார் விஜய்.
ஸோ, இம்முறை விஜய் நீக்கப்பட்டு, நாம் முன்பே சொன்னது போல ரொட்டேஷன் முறையில் தவான் - லோகேஷ் ராகுல் கூட்டணியை களமிறக்கலாம்.
மிடில் ஆர்டர்:
இரண்டாவது போட்டியில் சேர்க்கப்பட்ட புஜாரா தான், அந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சார்பாக அதிக பந்துகளை சந்தித்த ஒரே பேட்ஸ்மேன். இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தமாக 112 பந்துகளை சந்தித்தார்.
அஜின்க்யா ரஹானே..... இவர் தான் உண்மையிலேயே இந்திய அணி நிர்வாகத்துக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரும் தர்ம சங்கடத்தில் உள்ளார்.
கடந்த இரு ஆண்டில் (2016 - 2018) வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 7 ஆட்டங்களில் ரஹானே ஆடியிருக்கிறார். அதில், அவர் அடித்த மொத்த ரன்கள் வெறும் 334 மட்டுமே. அதிலும், 229 ரன்கள் ஏசியன் பிட்சில் அடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இலங்கைக்கு சென்ற போது, 3 டெஸ்ட் போட்டிகளில், ஒரு சதம் (132) உட்பட 229 ரன்கள் குவித்தார். ஆவரேஜ் 76.33.
இந்த தொடரை தவிர்த்து, ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த மொத்த ரன்கள் 105 மட்டுமே. அதிகபட்சம் 48.
டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து கொண்டு, படு மோசமாக சொதப்பி வரும் ரஹானேவை எப்படி ஃபார்முக்கு கொண்டு வருவது என தவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.
ஒருவேளை, கோச் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி அதிரடி முடிவை எடுக்கும் பட்சத்தில், ரஹானே நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்படலாம்.
லோ ஆர்டர்:
ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக், வரும் போட்டியில் இடம் பெறுவது சந்தேகமே. அதனை இன்றைய பேட்டியில், ரவி சாஸ்திரி நாசூக்காக தெரிவித்துள்ளார். "போட்டி நடைபெறும் நாளன்று, காலை 11 மணிக்கே, ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
ஸோ, விக்கெட் கீப்பர் அன்ட் லோ ஆர்டர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு பண்ட் சேர்க்கப்படலாம்.
ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை, அவரை 'அடுத்த கபில் தேவ்' என்று சொல்பவர்கள் வாயில் ஃபெவி குயிக் போட்டு ஒட்ட வேண்டும்.
பந்துவீச்சை பொறுத்தவரை, 18ம் தேதி கிரவுண்ட் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே, யார் யார் அணியில் இடம் பிடிப்பார்கள் என்று சொல்ல முடியும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்,
விஜய் நீக்கப்பட்டு தவான் - லோகேஷ் ராகுல் ஒப்பனிங் இறக்கப்படலாம்.
ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்படலாம்.
(அல்லது)
ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டு கருண் நாயர் சேர்க்கப்படலாம்.
தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தற்போது ஃபிட் ஆகி இருக்கிறார். இவர் அடுத்தப் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.
அதேபோல், கேப்டன் விராட் கோலிக்கு முதுகு வலி இருக்கிறது. ஆனால், தினம் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று கூட, மூன்று பேட் கொண்டு மாறி மாறி பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். ஒருவேளை, அவரின் முதுகு வலி முழுமையாக குணமடையவில்லை எனில், நம்ம அஷ்வின் கூட கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அதாவது, மோசமான ஃபார்மில் இருக்கும் ரஹானே நீக்கப்பட்டு, அஷ்வின் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.