Nottingham 'டூ' Nothing! 17 வருடங்களில் இல்லாத இங்கிலாந்தின் ஊர்வன ஆட்டமும், இந்தியாவின் பறப்பன வெற்றியும்!

2001ம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் ஒருவர் இவ்வளவு பொறுமையாக ஆடியது இல்லை

இந்தியா vs இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தை பவுலிங் செய்ய அழைத்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் என்று சிறப்பான ஃபவுண்டேஷன் அமைத்தனர். உமேஷ், கவுல், பாண்ட்யா என்ற அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களையும் இந்த ஜோடி மூச்சு வாங்கவிட்டது.

இதனால், ஸ்பின் ட்வின்ஸ்களை கேப்டன் கோலி களமிறக்கினார். தொடக்க வீரர்கள் இருவர், ஃபார்மில் இல்லாத ஜோ ரூட், என மூவரையும் அடுத்தடுத்து காலி செய்தார் குல்தீப் யாதவ். பின் கேப்டன் மோர்கனை சாஹல் வீழ்த்த, 105-4 என தவித்தது இங்கிலாந்து.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு காயத்தில் இருந்து மீண்டு ஒருநாள் தொடரில் பங்கேற்ற பென் ஸ்டோக்ஸ், பீக் ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்பின், ஃபாஸ்ட் என்று இரு வெரைட்டியான இந்திய பவுலிங் அட்டாக்கை பல வெரைட்டி ஷாட்கள் கொண்டு பட்லர் விளாச, ஸ்டோக்ஸ் நிதானம் காட்டினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

குல்தீப் வீசிய 38.6வது ஓவரில், பந்து லெக் சைடில் செல்ல, அதை லைட்டாக ‘டிச்’ செய்ய பட்லர் முயல், பந்து அவரது பேட்டை லைட்டாக ‘டச்’ செய்தது. கனக்கச்சிதமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் தோனி, பந்தை பிடிக்க, அழுத்தமாக அப்பீல் செய்தார். சற்று மவுனம் காத்த அம்பயர், விரலை உயர்த்த பட்லர் விரக்தியுடன் வெளியேறினார்.

இதன்பின், பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் தனது 12வது ஒருநாள் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடி வீரரான பென் ஸ்டோக்ஸின் மிக பொறுமையான அரைசதம் இதுவேயாகும். 2001ம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் அடிக்கும் இரண்டாவது மெதுவான அரை சதமும் இதுவே.

ஆனால், ஸ்டோக்ஸ் 50 ரன்னோடு குல்தீப் ஓவரில் அவுட்டானார். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 49.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

இந்தியா இதனை சேஸ் செய்யுமா? என்பதில் நமக்கு சந்தேகமே இல்லை. விக்கெட் Flat-ஆக உள்ளது. வலுவான பேட்டிங் உள்ளது. அச்சுறுத்தும் வகையில் இங்கிலாந்தின் பவுலர்கள் கிடையாது. அப்புறம் எப்படி இந்தியா தோற்கும்?.

தொடக்க வீரர் ரோஹித் சர்மா 114 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர் உதவியுடன் 137 ரன்கள் குவித்து இறுதி வரை நாட் அவுட். தவான் 40 ரன்கள், கேப்டன் விராட் கோலி 82 பந்தில் 75 ரன்கள். மேலே உள்ள பாராவில் சொன்னது போல் இங்கு நடந்துவிட்டதா!. அவ்வளவு தான்… இந்தியா ‘வின்’. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதம் அடித்திருந்த ரோஹித், நேற்றைய முதல் ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் படைத்த சில ரெக்கார்டுகள் இதோ,

குல்தீப் யாதவ் நேற்று 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஒருநாள் போட்டிகளில் இடது கை ஸ்பின்னர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு இதுவே.

இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் ஸ்பின்னர் ஒருவரின் சிறந்து பந்துவீச்சு இதுவே.

இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஸ்பின்னர் ஒருவரின் சிறந்து பந்துவீச்சு இதுவே.

ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர் ஒருவரின் நான்காவது சிறந்து பந்துவீச்சு இதுவே.

நேற்றைய போட்டியில் ரோஹித் – கோலி இணை 2வது விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்தது. இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் கூட்டணி அமைத்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை இருவரும் பெறுகின்றனர். இதுவரை 14 போட்டிகளில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முதல் இடத்தில் 26 போட்டிகளுடன் சச்சின் – கங்குலி உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கடைசி 7 இன்னிங்ஸ் ஸ்கோர்,

112
46*
160*
75
36
129*
75

7 போட்டிகளில் 633 ரன்கள்; ஆவரேஜ் 158.25; ஸ்டிரைக் ரேட் 98.44.

நாட்டிங்காமில் உள்ள இதே மைதானத்தில் தான் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 242 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து, நேற்றைய போட்டியில் 268 ரன்கள் மட்டும் எடுத்து இந்தியாவிடம் தோற்றுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close