இந்தியா vs இங்கிலாந்து: உலகின் நம்பர்.1 அணியை வீழ்த்துமா இந்தியா?

ஒருவேளை தோற்றுவிட்டால், 'ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது' என்ற பெயர் வந்துவிடும்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மாலை 5 மணிக்கு டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இன்று (ஜூன் 12) மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது என்பதே சுவாரஸ்யமான விஷயமாகும். அதுவும், உலக சாம்பியனும், தற்போது வலுவில்லாமல் இருக்கும் ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் கடந்த மாதம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வீழ்த்தி இருப்பதால், தற்போது இந்தியாவுக்கு எதிராக அதே ஆதிக்கத்தை வெளிப்படுத்துமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால், ஒரேயொரு நெருடல் என்னவெனில், இது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர். இது ரொம்ப ரொம்ப டேஞ்சரானது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தான், ஒரு அணியின் உண்மையான திறமையை வெளிக்கொண்டு வரும். ஆனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துக் கூறுவது மிகவும் கடினமான விஷயமாகும்.

அதுவும், இன்று போட்டி நடைபெறவுள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானம் Flat விக்கெட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. Flat விக்கெட்டுகள் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும். பவுலர்களின் டங்குவார் கிழிந்துவிடும். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து கடைசி டி20 போட்டி Flat  விக்கெட் தான். இதனால் தான் அப்போட்டியில் பவுலர்கள் நொறுக்கப்பட்டு ரன் மழை பொழியப்பட்டது.

இன்றைய போட்டியில், இந்திய அணியை பொறுத்தவரை புவனேஷ் குமார் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாரா என்று தெரியவில்லை. போட்டி ஆரம்பிக்கும் போது தான் அது உறுதி செய்யப்படும். அப்படி அவர் விளையாடவில்லை எனில், அவருக்கு பதில் ஷர்துள் தாக்குரோ, சித்தார்த் கவுலோ அணியில் சேர்க்கப்படலாம். ஏற்கனவே, பும்ரா தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டதால், அந்த இடத்தில் உமேஷ் யாதவ் விளையாடி வருகிறார். இந்தியாவின் பவுலிங் தான் வீக்காக இருக்குமோ என்று தோன்றுகிறது. சாஹல், குல்தீப் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தலாம். பேட்டிங்கில் பெரிதாக எந்த மாற்றம் இருக்கப் போவதில்லை.

இங்கிலாந்தை பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அணிக்கு இன்று திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து அதே வேகத்தோடு ஒருநாள் தொடரில் மீண்டும் களமிறங்கும் இங்கிலாந்து, இந்தியாவையும் ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் உள்ளது. ஒருவேளை தோற்றுவிட்டால், ‘ஆஸ்திரேலியா வலு இல்லாததால் தான் இங்கிலாந்து வென்றது’ என்ற பெயர் வந்துவிடும் என்பதற்காக, இந்தியாவை ஒருவழி செய்துவிட வேண்டும் என்றே இங்கிலாந்து உள்ளது.

அதேசமயம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களது ஸ்டிராடஜி, களத்தில் திட்டத்தை சரியாக Execute செய்வதே ஆகும். அதை செய்துவிட்டாலே, எதிராளி யாராக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறது!. ஆகவே, ரிலாக்ஸ் மோடில் இந்திய அணி பயிற்சி செய்துவருகிறது.

மாலை 5 மணிக்கு தொடங்கும் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை காண கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close