இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் டிராவானது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் நகரின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களை மட்டுமே விளையாடி 183 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும் முஹமது ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 84.05 ஓவர்கள் விளையாடி 278 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 84 ரன்களும் ரவிந்திர ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 85.5 ஓவர்களை சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 109 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 4வது நாள் ஆட்டத்தில் களம் இறங்கியது. 1 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 52 ரன்கள் எடுத்திருந்தபோது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 5வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி மிக எளிதாக 156 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் 5வது நாள் ஆட்டம் பலத்த மழை காரணமாக தொடங்கப்படுவது தாமதமானது.
அங்கே தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மழை பொழிவு குறைந்ததையடுத்து அதிகாரிகள் மைதானத்தை ஆய்வு செய்ய முடிவெடுத்தனர். ஆனால், அதற்கு முன்னதாக மைதானத்தில் மீண்டும் மழைப்பெய்ய தொடங்கியது. இதனால், ஆட்டம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும், இங்கிலாந்தில் இன்று முழுவதும் மழை பொழியும் என்பது தெரிவிக்கப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் தொடங்க முடியாது என்பதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.
மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் மழை செய்த சதியால் ஆட்டம் கைவிடப்பட்டு டிராவானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“