26/11 என்ற இந்த தேதியை மட்டும் ஒவ்வொரு இந்தியனாலும் என்றும் மறக்க முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலில் எண்ணற்ற அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல கனவுகளுடன் அன்று தங்கள் வாழ்க்கை பயணத்தைக் தொடங்கிய பலரும் நினைவுகளாக அதன்பிறகு மாறிப் போனார்கள்.
சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியா அப்படியொரு மோசமான தாக்குதலை அதற்கு முன் கண்டதில்லை என்றால் அது மிகையாகாது.
அந்த 26/11 தாக்குதலில் ஆட்டம் கண்டது இந்தியா மட்டுமல்ல... இந்திய கிரிக்கெட்டும் கூட. உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளையும், இனி இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டுமா? என்று யோசிக்க வைத்துவிட்டது அந்த சம்பவம்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான், கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது. தோனியின் கைகளில் முழுவதுமாக கேப்டன்ஷிப் வந்திருந்த நேரம் அது.
முதலில் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வந்தன. முதல் இரு போட்டிகளிலும் யுவராஜ் சிங் சதம் விளாச, இந்திய அணி வரிசையாக வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தது.
முதல் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற, ஐந்தாவது போட்டி நவம்பர் 26, 2008 அன்று கட்டாக்கில் நடைபெற்றது. அன்று தான், தீவிரவாதிகள் மும்பை மீது ஈவு இரக்கமற்ற தாக்குதலை தொடங்கினர்.
அதே தினத்தில் நடைபெற்ற போட்டியிலும், இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிந்ததும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த விவரம் வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி, பிசிசிஐ அந்த ஒருநாள் தொடரை ரத்து செய்தது. இதனால், மீதமிருந்த இரு போட்டிகளில் ஆடாமல், இங்கிலாந்து வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம், இங்கிலாந்து வீரர்களை பெரிதும் பாதித்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உலக கிரிக்கெட் நாடுகளுக்கும் தான். ஏன் இந்திய வீரர்களுக்கும் கூட.. இப்படியொரு தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
தோனி, சச்சின் என கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. அவர்கள் அருகில் கூட யாரும் செல்ல முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை, இந்திய கிரிக்கெட் அணியில் நிலவியது. இங்கிலாந்து வீரர்களும், அதிர்ச்சியுடனேயே இந்தியாவை விட்டு வெளியேறினர்.
அதன்பிறகு, தோனியும், சச்சினும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தோனி சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கிறது.
"இந்திய குடிமகனாக இருப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்திய அணியின் கேப்டனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன். நாங்கள் விளையாட்டில் தான் ஹீரோக்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் நமது ராணுவ வீரர்கள் தான். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த சம்பவத்தில் இருந்து நாம் விரைவில் மீண்டு வருவோம்" என்று தோனி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அதன் சாட்சியாக, அச்சுறுத்தல் காரணமாக எந்த அணி இந்தியாவை விட்டு வெளியேறியதோ, அதே இங்கிலாந்து அணி, தாக்குதல் நடந்த அடுத்த மாதமே, அதாவது டிசம்பர் மாதமே மீண்டும் இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. விளையாட வைத்தது இந்தியா.
அந்த அளவிற்கு, தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் இருந்து விரைவில் மீண்டு, இங்கிலாந்து வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து, இங்கிலாந்து நிர்வாகமே ஆச்சர்யப்படும் அளவிற்கு பாதுகாப்பை உறுதி செய்து, கிரிக்கெட் விளையாடி, தீவிரவாதத்தையும் வென்று, அந்த டெஸ்ட் தொடரையும் வென்று, எந்த நாடும் எங்கள் நாட்டிற்கு வந்து தைரியமுடன் விளையாடலாம் என்று உலகிற்கு உரக்கச் சொன்னது நமது இந்தியா!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.