Lord's Test Match: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இந்த நான்கு நாடுகளுக்கும் ஒவ்வொரு முறையும் இந்தியா சென்று ஆடும் போதும், டெஸ்ட் போட்டிகளில் இம்முறையாவது இந்தியா ஜெயிக்காதா என்று, ரசிகர்களும், இந்திய அணி நிர்வாகமும் ஏங்குவது சகஜமே!. நடப்பு இங்கிலாந்து தொடரிலும் அப்படியொரு ஏக்கம் அபாரமாக இருந்தது. ஆனால், நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோற்று போயிருக்கிறது. குறிப்பாக, லார்ட்ஸ்-ல் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுத்தேவிட்டது. "உலகின் நம்பர்.1 டெஸ்ட் அணிக்கு இது மிகப்பெரிய அவமானம்..... இந்தியா சரண்டர்.... சுற்றுலா வந்தவர்களை சின்னாபின்னமாக்கிய இங்கிலாந்து" என்றெல்லாம் வெளிநாட்டு பத்திரிக்கைகள் தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டுள்ளன. ஒத்துக்குறேன்... உலகின் நம்பர்.1 அணி மூன்றே நாளில் சுருண்டுவிட்டது தான்.
ஆனால், இந்த தோல்வி உண்மையானதா? நியாயமானதா என்றால், தர்மப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னடா இது.. தர்மம், நியாயம்-னுலாம் பேசுறான்னு நினைக்க வேண்டாம். பட், அதுதான் உண்மை.
இந்த தொடரில், இதுவரை நடைபெற்ற இரு போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கிரிக்கெட்டை, கிரிக்கெட்டாக பார்க்கும் விமர்சகர்களுக்கு தெரியும்..., மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்று.
எப்படின்னு சொல்றேன் கேளுங்க!.
பர்மிங்கமில் நடைபெற்றது முதல் டெஸ்ட்...
இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தன் சொந்த மண்ணில், 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஒன்றும் பெரிய விஷயமல்ல.. ஆனால், இங்கிலாந்து கண்டிஷனில் திணறும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த ரன்களுக்குள் கட்டுப்பட்டது தான் மேட்டரே. அதுவும், டியூக் பந்துகளை இந்திய பவுலர்கள் இவ்வளவு அபாரமாக ஹேண்டில் செய்வார்கள் என இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை.
அதன்பின் விளையாடிய இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில், இந்திய பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து கட்டுப்படுத்தினாலும், விராட் கோலி எனும் ஒற்றை மனிதனிடம் தோற்றுப்போனது. தனி ஆளாக கோலி 149 ரன்கள் விளாச, இந்திய அணி 274 ரன்கள் சேர்த்தது.
பிறகு, இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து வெறும் 180 ரன்களில் சுருண்டது. ஆனால், இந்தியாவோ 162 ரன்னில் ஆல் அவுட்டாக இங்கிலாந்து வேர்த்து விறுவிறுத்து தான் அந்த வெற்றியை பெற்றது. சேஸிங்கின் போது, வெளியில் இங்கிலாந்து வீரர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாததைப் போல முகத்தை வைத்துக் கொண்டாலும், உள்ளுக்குள் அவர்கள் அடைந்த பீதிக்கு அளவேயில்லை.
இந்தியா நூலிழையில் வெற்றியை கோட்டைவிட்டது, இங்கிலாந்து அதே நூலிழையில் வெற்றிப் பெற்றது.
லார்ட்ஸ்-ல் நடந்த இரண்டாவது டெஸ்ட்,
இந்த 2வது போட்டியில் தான், நாம் முன்பே சொன்னது போல, இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால்....
கடந்த 9ம் தேதி இப்போட்டி தொடங்கியது. முதல் நாளே தொடர் மழை. இதனால், டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. 10ம் தேதி இரண்டாவது நாள்... அன்றும் மழை விட்டு விட்டு பெய்தது. நல்ல காற்று வீசியது. இதனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு Swing மற்றும் Pace ரணகொடூரமாக எடுக்கும் என்றும், முதலில் பேட்டிங் செய்யும் அணியின் நிலைமை பரிதாபமான நிலையில் இருக்கும் என்றும் ரிப்போர்ட் கொடுக்கப்பட, டாஸ் வெல்லும் அணி, யோசனையே இல்லாமல் பவுலிங் தேர்வு செய்ய காத்திருந்தது.
ஆனால், டாஸ் இங்கிலாந்துக்கு விழ, இந்தியாவின் தோல்வி அந்த நிமிடமே நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது நாளிலேயே, முதல் இன்னிங்ஸில், இந்தியா 107 ரன்களில் சுருண்டது.
"அன்று ஸ்விங் ஆன பந்துகளை, உலகின் எந்த தலைசிறந்த டெஸ்ட் அணியாலும் சிறப்பாக எதிர்கொண்டிருக்க முடியாது. எப்பேற்பட்ட அணியாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் பரிதாபமான நிலைக்கு சென்று இருப்பார்கள். ஏன்.. இங்கிலாந்து விளையாடி இருந்தால் கூட, பேட்ஸ்மேன்கள் சரண்டர் ஆகியிருப்பார்கள்" என்று சொல்வது நாம் இல்லை... இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அப்போ, இந்தியாவின் நிலையை யோசித்துப் பாருங்க!.
இருந்தாலும், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய போது, ரூட் உட்பட முதல் நான்கு விக்கெட்டுகளை, இந்திய சீமர்கள் 89 ரன்களுக்குள் சுருட்டியிருந்தனர். இத்தனைக்கும், இங்கிலாந்து பேட்டிங் செய்த போது நல்ல வெயில் அடித்தது தான் கொடுமை. பின்னர், வோக்ஸ் சதமடிக்க (137), பேர்ஸ்டோ 93 ரன்களும் அடிக்க, இங்கிலாந்து 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆனால், இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இரு டெஸ்ட் போட்டிகளிலும், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியாவை 130 ரன்களுக்குள் சுருட்டியது தான் இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடாகும். இந்த இடத்தில் தான், இந்தியா தாக்குப்பிடிக்க முடியாமல் சரண்டர் ஆனது. இங்கிலாந்து மீடியா பாஷையில் சொல்ல வேண்டுமெனில் மண்டியிட்டது.
லார்ட்ஸ் டெஸ்ட்டில், இயற்கையால் இந்தியா மோசம் போனது என்பதே நிதர்சன உண்மை. இல்லையெனில், ஜெயித்திருந்தாலும் மூன்றே நாளில் இந்தியாவை, இங்கிலாந்தால் வீழ்த்தியிருக்க முடியாது.
என்னதான் இருந்தாலும், முடிவு வெற்றியா, தோல்வியா என்பதே விஷயம்!. இதற்காக இந்தியாவின் தோல்விக்கு சப்பைக்கட்டு கட்ட முடியாது. விராட் சொன்னது போல், தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்தப் போட்டியில் வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
அதேசமயம், மீதமிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அவ்வளவு சீக்கிரம் வென்றுவிட முடியாது என்பதும் உண்மையே!.
மேலும், சுவாரஸ்யமான செய்திகள் இதோ,
கூக்கபுரா Vs டியூக் : சர்வதேச கிரிக்கெட்டில் மல்லுக்கட்டும் இவர்கள் இருவரும் யார்?
இது அடுக்குமா கோலி? பொங்கி வந்த புஜாராவை திருப்பி அனுப்பலாமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.