இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நேற்று தொடங்கியது. இந்திய அணி மாற்றம் ஏதும் இல்லாமலும், இங்கிலாந்து இரண்டு மாற்றங்களுடனும் களமிறங்கியது. அதில் ஒரு 'மாற்றம்' நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.
ஆம்! சாம் குர்ரன் பற்றி தான் சொல்கிறேன். 20 வயதான இந்த வீரன் தான், யானை காதில் புகுந்த கட்டெறும்பு போல, விராட் கோலி அன்ட் பாய்ஸுக்கு நேற்று மெகா குடைச்சல் கொடுத்து, வெறுத்துப் போகும் அளவுக்கு செய்துவிட்டார்.
நேற்றைய முதல் நாளில் பிட்ச் கடினமாக காணப்பட்டது. பெரிதாக பவுன்ஸ் ஆகாது என்றும், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்து ரன்களை குவிக்கலாம் என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து டாஸ் வெல்ல, செகண்ட் ஒப்பீனியன் இன்றி, பேட்டிங் தேர்வு செய்தார் கேப்டன் ஜோ ரூட்.
ஆனால், இரு அணி கேப்டன்களும் கணித்தது தவறு என்பது போல் பிட்ச் ரியாக்ட் செய்தது. எதிர்பார்த்ததைவிட பந்து இருமடங்கு ஸ்விங் ஆனது. இதை பயன்படுத்திக் கொண்ட இந்திய பவுலர்கள் பும்ராவும், இஷாந்தும், இங்கிலாந்தை ஆஃப் தி டிராக் கொண்டு சென்றுவிட்டார்கள்.
தொடக்க வீரர் ஜென்னிங்சை, 0 ரன்னில் இன் ஸ்விங் செய்து பும்ரா காலி செய்த விதம் வேற லெவல் எனலாம். 'டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் பார்த்ததிலேயே மோசமான விக்கெட் இது' என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த விக்கெட்டை வர்ணிக்கிறார் என்றால் பார்த்துக்கோங்க.
'பிளேயிங் லெஜண்ட்' அலஸ்டைர் குக், வழக்கம் போல் குறைவான ரன்களுடன் (17) திருப்திப்பட்டுக் கொண்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இங்கிலாந்து 86-6 என்று தள்ளாடியது. இதுவரை எல்லாமே இந்தியாவுக்கு நல்லாத் தான் போய்க் கொண்டிருந்தது.
7- விக்கெட்டுக்கு சேர்ந்த சாம் குர்ரன் - மொயின் அலி ஜோடி, இந்திய பவுலர்களை கொஞ்சம் அதிகமாகவே சோதனை செய்துவிட்டது. மொயின் அலி 40 ரன்களில் அவுட்டாக, தொடர்ந்து சாம் குர்ரன் தனது ரன் விகிதத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார்.
முடிவில், 76.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இங்கிலாந்து 246 ரன்களை சேர்த்தது. இந்திய அணி சார்பில், பும்ரா 3 விக்கெட்டுகளும், இஷாந்த், ஷமி, அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
கடைசி விக்கெட்டாக அவுட்டான குர்ரன், 78 ரன்கள் எடுத்தார். எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து எடுத்த மொத்த ரன்கள் 180 மட்டுமே. ஆனால், அதில் சாம் குர்ரன் அடித்த ரன்கள் மட்டும் 63. அந்தப் போட்டியில் 31 ரன்களில் இந்தியா தோற்றது. இதற்கு முதன்மையான காரணம் குர்ரன் தான். மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸின் வருகையால், அணியில் இருந்து நீக்கப்பட்ட குர்ரன், நான்காவது டெஸ்ட் போட்டியில் க்ரிஸ் வோக்ஸ் வெளியேற்றம் காரணமாக, மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது மீண்டும் இந்திய அணிக்கு இவர் குடைச்சல் கொடுத்திருகிறார்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த குர்ரன், "விக்கெட் விழுந்தாலும், பயமில்லாமல் ஆட வேண்டும் என முடிவு செய்து அடித்தேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
(இந்த டெஸ்ட் மேட்சுல மட்டுமின்றி, இந்த டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லவில்லை எனில், அதற்கு ஒரே காரணம் இந்த 'கட்டெறும்பு' குர்ரன் தான்!)
இதைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, நேற்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.
India vs England 4th Test Day 2
இன்றைய இரண்டாம் நாள் பிட்ச், எப்படி ரியாக்ட் செய்யும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், நேற்று முதல் நாளே, ரிப்போர்ட் வந்தது ஒன்று, பிட்ச் செயல்பட்டது ஒன்று. ஆக, இன்று பிட்ச் எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்தே, இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் இருக்கும்.
இன்றைய போட்டியின் Live Cricket Score-ஐ இதே செய்தியில் நீங்கள் உடனுக்குடன் காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.