இந்திய அணியின் ஸ்மார்ட் சொதப்பல்! அச்சத்தை நிஜமாக்கிய ஜோஸ் பட்லர்!

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா இந்த தொடரில், தனது வெற்றியை, லோ ஆர்டர் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்துவிட்டது

எதிர்பார்த்தது போலவே நன்றாக சொதப்பியுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

முதல் நாள் ஆட்டத்தில்  133-1 என்று கமாண்டிங் பொசிஷனில் சென்றுக் கொண்டிருந்த இங்கிலாந்து, திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அட! பரவாயில்லையே என இந்திய ரசிகர்கள் நிம்மதியாக உறங்கச் சென்றனர்.

ஆனால், நமக்கு என்னவோ மனதுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த ஜோஸ் பட்லர் நிக்குறாப்ளயே… கடைசி மூணு விக்கெட்டுல ஏதாச்சும் ஒண்ணு கூட பார்ட்னர்ஷிப் போட்டு அடிச்சுடுவாரோ-னு அச்சம் இருந்தது. நம் மனத் திரையில் ஓடியதை அப்படியே லைவ் ஆக்கி காட்டிவிட்டார் பட்லர்.

ஸ்டூவர்ட் பிராட்டுடன் பார்ட்னர்ஷிப் போட்ட பட்லர் 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்திருக்கிறார். கேப்டன் விராட் கோலி வெறுத்துப் போகும் அளவிற்கு பேட்டிங் செய்தது இந்த பார்ட்னர்ஷிப். ஒருவழியாக 332 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த், பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

கடைசி விக்கெட்டாக பட்லர் 89 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி மூன்று விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து, இந்திய கேப்டன் கோலியின் கண்களின் கானல் நீரை வரவழைத்துவிட்டது இங்கிலாந்து.

எப்போது, 220 ரன்களுக்கு மேல் இங்கிலாந்தை அடிக்க விட்டோமோ, அப்போதே, இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி பறிபோய் விட்டதாகவே தோன்றுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், கடைசி 3 விக்கெட்டுகளை அடிக்கவிட்டு தான், வெற்றிப் பெற வேண்டிய முதல் போட்டியில் இந்தியா தோற்றது. அதேபோல் தான் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் கடைசி நான்கு விக்கெட்டுகளை அடிக்க விட்டு, சேஸிங் செய்ய முடியாமல் இந்தியா தோற்றது. இப்போது மீண்டும் அப்படியொரு தவறை முதல் இன்னிங்ஸில் செய்துள்ளது இந்தியா.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், இந்தியா இந்த தொடரில், தனது வெற்றியை, லோ ஆர்டர் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஷிகர் தவானை 3 ரன்களில் இழந்துவிட்டது. இன்னும் இந்தியா செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அட்லீஸ்ட், 300 ரன்னாவது அடித்தால் தான் கொஞ்சம் போராடிப் பார்க்க முடியும்.

அதைச் செய்யுமா இந்திய அணி?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close