இந்தியா vs இங்கிலாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ரிகர்சல்!

உலகக் கோப்பையின் முன் மாதிரியாகவே இந்த ஆட்டம் பார்க்கப்படுகிறது

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

2019ல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட முழுதாக நேரம் இல்லை. இந்தியாவுக்கு இன்னும் 16 – 17 ஒருநாள் போட்டிகள் தான் அதற்கிடையில் உள்ளன. இதனால், ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றுமா என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது, உலகக் கோப்பையின் மாதிரியாகவே பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இங்கிலாந்து அணி தனது மண்ணில், இந்தியாவுக்கு எதிராக, நடப்பு ஒருநாள் தொடர் கோப்பையை இழந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இரு அணிகளும் இன்று இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரை வலிமையான டாப் ஆர்டர் உள்ளது. ரோஹித், தவான், கோலி ஆகியோர் டாப் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். மிடில் ஆர்டரில் லோகேஷ் ராகுல் தான் சொதப்பி வருகிறார். ரெய்னாவை அணியில் இருந்து நீக்கி தினேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. ரெய்னாவிடம் சிறிது தடுமாற்றம் உள்ளது என்பது உண்மை தான். அதேசமயம், தினேஷ் கார்த்திக்கின் கன்சிஸ்டன்சியும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தினேஷுக்கு வாய்ப்புகள் பல கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலானவற்றில் அவர் ஜொலித்துள்ளாரா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் திறமையான வீரர் என்றாலும், கன்சிஸ்டன்சியில் சறுக்கவே செய்கிறார். அதற்காக அவரை குறைத்து மதிப்பிடவும் முடியாது. ரெய்னா வா?…. தினேஷா?… என்றால் ரெய்னாவை பிக் செய்வதே பெஸ்ட் சாய்ஸாக இருக்க முடியும். மிடல் ஆர்டரில் உள்ள ஒரே இடது கை பேட்ஸ்மேன் என்ற ஒரே காரணத்திற்காக.

லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியம். ராகுலும், ரெய்னாவும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளித்தால், இந்தத் தொடரில் மட்டுமல்லாது, உலகக் கோப்பையை கூட இந்தியாவால் வெல்ல முடியும்.

இருப்பினும், ட்விஸ்ட் வைக்கும் விதமாக லோகேஷுக்கு பதில் ஷ்ரேயாஸ் அய்யர் கூட இன்று அணியில் சேர்க்கப்படலாம்.

லோ ஆர்டரில், தோனி, பாண்ட்யா பலம் சேர்க்கின்றனர். ஐபிஎல்லில் தோனியின் அபாரமான ஷார்ட் கனெக்ட் அனைவரையும் வியக்க வைத்தது. தோனியின் நம்பிக்கை மற்றும் திறமை இன்னும் அப்படியே தான் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பந்துவீச்சில் டாப் இரண்டு ஃபாஸ்ட் பவுலர்களான பும்ரா, புவனேஷ் காயம் காரணமாக அணியில் இடம் பெறாமல் இருப்பது மிகப்பெரிய சறுக்கல். இருப்பினும், இன்றைய போட்டியில் சித்தார்த் கவுல்-க்கு பதிலாக புவனேஷ் குமார் சேர்க்கப்படலாம். அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ் வேண்டும் என பிசிசிஐ நினைத்தால், இன்றைய போட்டியில் அவரை சேர்த்து ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என நம்பலாம். அப்படி சிந்திக்கும் பட்சத்தில், ஷர்துள் தாகுர் அணியில் இடம் பெற வாய்ப்புண்டு.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரர் ஜேசன் ராய் விரல் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அல்லது சாம் குர்ரன் சேர்க்கப்படலாம்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகள் மற்றும் லைவ் ஸ்கோர் கார்டினை ஐஇதமிழ் தளத்தில் நீங்கள் உடனக்குடன் கண்டுகளிக்கலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close