இந்தியா vs இங்கிலாந்து: கோப்பையை வெல்லப் போவது யார்? சமூகம் என்ன சொல்லுதுன்னா!!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியே அடைந்தது கிடையாது

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்கவுள்ளது. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணையும் பட்சத்தில் இந்திய அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், கடந்த 3ம் தேதி தொடங்கியது. மான்செஸ்டரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்திய ஸ்பின்னர் குல்தீப் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்த, லோகேஷ் ராகுல் சதம் அடிக்க இந்திய அணி அப்போட்டியில் சிறப்பாக வென்றது.

ஆனால், கடந்த 6ம் தேதி கார்டிஃப் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதல் போட்டியில் குல்தீப் ஓவரில் அவசரப்பட்டு ஆடி அவுட்டான இங்கிலாந்து வீரர்கள், இரண்டாவது போட்டியில் அவரது பந்தை சரியாக கனெக்ட் செய்தனர். இதனால், பெரிய நெருக்கடி இன்றி இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இன்று பிரிஸ்டோலில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது. கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணியில், மாற்றம் இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படி ஒருவேளை மாற்றம் செய்தால் ரெய்னாவுக்கு பதில், க்ருனல் பாண்ட்யா அணியில் இடம் பெறலாம். இருப்பினும், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

இங்கிலாந்தை பொறுத்தவரை, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டு முழுவதுமாக தகுதி பெற்றுவிட்டார். இதனால், இரண்டு போட்டியிலும் சொதப்பிய ஜோ ரூட்டிற்கு பதிலாக சேர்க்கப்படலாம். அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த போட்டியில், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்ததால், அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. ஒருவேளை பென்ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய நேரப்படி, இன்று மாலை 06.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இப்போட்டி குறித்து சமூகம் என்ன சொல்லுதுன்னா….

ரோஹித் ஷர்மா இன்று 14 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கேப்டன் கோலிக்கு அடுத்து பெறுவார்.

இன்று நடக்கவுள்ள மூன்றாவது போட்டியில் இந்திய தோற்றால், சர்வதேச கிரிக்கெட்டில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா இழக்கும் முதல் தொடர் இதுவேயாகும். இதுபோன்று, 7 டி20 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியே அடைந்தது கிடையாது.

இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் ரோஹித் – தவான் இணைந்து 38 ரன்கள் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் (1154) அடித்துள்ள வார்னர் – வாட்சன் தொடக்க இணையின் ரன்களை கடந்து ரோஹித் – தவான் கூட்டணி முதலிடம் பிடிக்கும்.

இன்று போட்டி நடக்கவுள்ள பிரிஸ்டோல் மைதானத்தில் இந்திய அணி கடைசியாக ஆடிய மூன்று ஒருநாள் போட்டியலும் வென்றுள்ளது. முதன்முறையாக இங்கு டி20 போட்டியில் தற்போதுதான் விளையாடுகிறது. அதேசமயம், இங்கிலாந்து இதே மைதானத்தில் கடைசியாக ஆடிய இரு டி20 போட்டியிலும் தோற்றுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close