அன்பரசன் ஞானமணி
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
பொருள்: காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.
எட்ஜ்பேஸ்டன் கிரிக்கெட் கிரவுண்டே அரண்டு போய் தான் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு மேட்ச் இது... ஹோஸ்ட் இங்கிலாந்துக்கு, 'நாங்க டஃப் கொடுக்க தான் வந்திருக்கோம்' என்பதை மைக் செட் போட்டு அலறாத குறையாக சொல்லியிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
ஆனால், அலறியது விராட் கோலி மட்டும் தானா? அல்லது இந்திய கிரிக்கெட் டீமா? என்பது தான் நமது முதல் கேள்வி.
இங்கிலாந்தை அதன் மண்ணில் எதிர்ப்பது என்பது, ஜுராசிக் பார்க்குக்கே சென்று டைனோசர்களிடம் சண்டை போடுவது போன்று. முழுவதுமாய் திரும்பி வருவது என்பது இயலாத காரியம்.
கடின பயிற்சி, மெகா உழைப்பு, விடா முயற்சி என பல 'அவுட் கோயிங்'-களுக்கு மெனக்கெட்டாலும், தோல்வி, போராட்டம், வலி என நிறைய 'இன் கம்மிங்' இருக்கும் என்பதை எதிர்நோக்கி தான் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கியது. ஆனால், அதில் இந்தியன் டீமை பொறுத்தவரை பேட்டிங் ஃபெயில்... பவுலிங் சக்சஸ்...!
இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் மற்றும் வார்ம் அப் போட்டியில் புஜாரா தொடர்ந்து சொதப்பியதால் தான் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இந்த முடிவுக்கு, நெகட்டிவ் மவுத் டாக் பெரிதாக வரவில்லை. ஆனால், லோகேஷ் ராகுல் செய்தது என்ன? முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள்... இரண்டாம் இன்னிங்ஸில் 13 ரன்கள். இரண்டையும் கூட்டி சொல்வது பெரிய வேலை என்பதால், நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
ராகுலிடம் உள்ள பிரச்சனை என்ன தெரியுமா? Nervous and Fear. அதாவது, பதட்டம் மற்றும் பயம். பயத்தில் இரண்டு வகையுள்ளது. அதில், ராகுலுக்கு 'Innate Fear' இருக்கிறது எனலாம்.. அதாவது, உள்ளார்ந்த அச்சம்.
நம்மால், சிறப்பாக அடிக்க முடியமா?
போன மேட்ச் அடிச்சுட்டோம்.. அப்போ இந்த மேட்ச் அடிக்கமாட்டோமோ?
அய்யோ! நம்ம மேலயே எல்லாரோட ஃபோகஸும் இருக்கே! கேவலமா அவுட்டாகி முகத்தை தொங்க போட்டு போவோமோ?
என்ற மோடில் தான் அவரது அணுகுமுறை உள்ளது.
நல்ல ஃபார்மில் இருந்து சொதப்பிய ஒரே வீரர் ராகுல் தான். இந்த தேவையில்லாத பதட்டத்தையும், பயத்தையும் அவர் வெளியே தூக்கி எறிந்தே ஆக வேண்டும். இல்லையெனில், அடுத்த போட்டியில் அவர் சதம் கூட அடிக்கலாம். ஆனால், அடுத்தடுத்து கன்சிஸ்டன்சி நிச்சயம் இருக்காது.
அடுத்ததாக, அஜின்க்யா ரஹானே! இவர் உண்மையில் ஃபார்மில் தான் இருக்கிறாரா? என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். இல்லனா, தனியா அழைத்துக் கொண்டு சென்று அவரிடம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். 'வீரர்களிடம் பேசுவதற்கு போதுமான நேரம் இல்லை' என போட்டி முடிந்த பிறகு கேப்டன் கோலி கூறியதை இங்கு மேற்கோளிட்டு காண்பிக்க விரும்புகிறேன்.
அடுத்து இரண்டாவது கேள்வி... முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் கோலியும் ஒரு காரணமா?
இரு இன்னிங்ஸிலும் இந்தியன் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக பெவிலியின் நோக்கி தலையை தொங்கவிட்டு நடந்துக் கொண்டிருக்க, விராட் கோலி மட்டுமே 149, 51 என இரு இன்னிங்ஸிலும் 'நா கோலிடா' என்று கெத்து கட்டினார். முதல் இன்னிங்ஸில் அவருக்கு 21, 51 ரன்களின் போது இரு கேட்சுகள் விடப்பட்டாலும், இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டிய ஒரே பேட்ஸ்மேன் கோலி மட்டுமே!.
ஆனால், இந்தியா தோல்வி அடைந்ததற்கு விராட் கோலியும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறார்.
ஆம்! இரண்டாம் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் 87/7. களத்தில் நிற்பது ஸ்பின்னர் அடில் ரஷித்தும், 20 வயதே ஆன பவுலிங் ஆல் ரவுண்டர் சாம் குர்ரனும். இவர்கள் பார்ட்னர்ஷிப்பின் போது, சுமார் ஒரு மணி நேரத்திற்கு, Well Set பவுலரான அஷ்வினை, பந்துவீசவே அழைக்கவில்லை கேப்டன் கோலி. இந்த இடத்தில் தான் இந்திய அணி சறுக்கியது. Second Innings Performer இஷாந்த் பந்துவீசினாலும், குர்ரன் அவற்றை கேஷுவலாகவே எதிகொண்டார். அதற்கு பிறகாவது அஷ்வினை கொண்டுவந்திருக்க வேண்டாமா?
மாபெரும் சதமடித்து, முதல் இன்னிங்ஸில் இந்தியாவை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து, இரண்டாம் இன்னிங்ஸில், இஷாந்த் ஷர்மாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்தின் 7 விக்கெட்டுகளை 87 ரன்களில் தூக்கியது என அத்தனை மாஸ் பெர்ஃபாமன்ஸும், இந்த ஒரு தவறால் பெரிதும் அடிப்பட்டது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட சாம் குர்ரன் 65 பந்தில் 63 ரன்கள் சேர்த்துவிட்டார். அஷ்வினை அப்போதே கொண்டு வந்திருந்தால், 63ல் பாதி போடுங்க... அட்லீஸ்ட் 30-35 ரன்களில் அவரை அவுட் செய்திருந்தாலே, இந்தியா வென்றிருக்குமே! ஏன்னா. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோற்றது.
ஏசி ரூமுல உட்கார்ந்து கிட்டு, இப்படி விளையாடி இருக்கலாம், அப்படி விளையாடி இருக்கலாம்-னு சொல்றது ஈஸி. ஆனால், கிரவுண்ட் எஃபோர்ட் வேற என்பதை நாமும் அறியாமல் இல்லை. இருந்தாலும், நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!.
20 வயது இளம் வீரரை, அந்த தருணத்தில் அவ்வளவு பெரிய ரன்னை ஏன் அடிக்க விட்டீர்கள்? என்பதல்ல நமது கேள்வி. 7 விக்கெட் இழந்த பிறகு, ஏன் ஒரு மணி நேரத்திற்கு அஷ்வினை பவுல் செய்ய அழைக்கவில்லை? என்பதே நமது கேள்வி.
தக்க தருணத்தை சரியாக பயன்படுத்துகிறாரா கோலி? என்ற ஐயம், நடப்பு ஐபிஎல்-ல் பெங்களூரில் நடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி தொட்டு, இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்க விரும்புகிறேன்,
'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மென்ட் வீக்கு' என்பது அண்ணன் வடிவேலு நமக்கு சொல்லிக் கொடுத்த ஜென்ரல் எத்திக்ஸ். முதல் டெஸ்ட் போட்டியின் பெர்ஃபாமன்ஸ் வைத்து பார்க்கும் போது, இந்தியன் டீமின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் முதல் லோ ஆர்டர் வரை அலசி பார்த்தால், பில்டிங்கும் வீக், பேஸ்மென்ட்டும் வீக்.. இதற்கு இடையில் ஒற்றை தூணாக, இரண்டையும் பேலன்ஸ் செய்யவும் முடியாமல், தன்னாலும் ஸ்டெடியாக முடியாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் கேப்டன் விராட் கோலி!.
அடுத்த போட்டிக்கு முன்னாள், இங்கிலாந்தில் மழை ஏதும் பெய்து பில்டிங், பேஸ்மென்ட் என இரண்டும் இறுகுகிறதா என்று பார்ப்போம்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.