இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நாளை (ஆக.1) தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்வது என்பது, இந்திய அணிக்கு எப்போதும் சவாலானதாகவே இருந்து வருகிறது. பிளைட் பிடிச்சு போவதில் பிரச்சனை இல்லை. அங்கு வெற்றிப் பெறுவதில் தான் பிரச்சனை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்... விராட் கோலி கேப்டனான பிறகு, அணிக்கு ஆக்ரோஷம் ஊட்டப்பட்டது. ஆனால், வெற்றி விகிதம் என்னவோ, டெஸ்ட் போட்டிகளில் தோனியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை ஒத்தே கோலியின் கேப்டன்ஷிப்பும் உள்ளது.
உள்நாடு, ஆசிய கண்டம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இடங்களில் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய டெஸ்ட் அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சூழலில் வெற்றிப் பெறுவதில் இன்னமும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது.
இறுதியாக, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் விளையாடியது தான் இந்தியா அணி சந்தித்த மிகப் பெரிய சவால். அந்தத் தொடரில் 3 போட்டிகளில், 2-1 என்று கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை இழந்தது. 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றதே மிகப்பெரிய விஷயம் என்று கூறலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆடுகளங்களில் குறுகிய ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மாஸ் காட்டும் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் சரண்டர் ஆவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த அவப்பெயரை முறியடிக்கும் விதமாக இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடராகும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா உச்சக்கட்ட பலம் வாய்ந்த அணியுடன் களமிறங்கி உள்ளது என்று சொல்ல முடியாது.
தொடக்க வீரர்களாக யாரை களமிறக்குவது என்பது குறித்து முடிவெடுப்பதில் இன்னும் குழப்பமே நீடிக்கிறது. பயிற்சிப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் தவான் டக் அவுட் ஆனார். அதேசமயம், முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ராகுல், இரண்டாம் இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக நின்றார். இதனால், தவானுக்கு பதிலாக ராகுலை சேர்த்து விடலாம் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிட முடியாது.
ராகுல் கடுமையான உழைப்பாளி. பேய் போன்று பயிற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், கன்சிஸ்டன்சி என்பதில் பெரிதும் சறுக்குகிறார். அபாரமாக ஒரு போட்டியில் சதம் அடிக்கிறார். ஆனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் சல்லீசாக அவுட்டாகிறார். ச்சே! என்று நினைக்கும் அளவிற்கு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி விடுகிறார். அதேசமயம், ராகுலை விட அதிக அனுபவம் கொண்ட தவான், இரு இன்னிங்ஸில் டக் அவுட் ஆகிவிட்டார் என்பதற்காக அவரை உட்கார வைப்பது சரியான முடிவான இருக்குமா? என்று பார்த்தால், இல்லை என்றே தோன்றுகிறது.
தவானின் பெரிய பலமே பயத்தை முகத்தில் காட்ட மாட்டார். ஓவர் ரியாக்ஷன்ஸ் கொடுக்க மாட்டார். சப்பை பாலில் அவுட்டானாலும் கூட, தெரியாம தொட்டுட்டேன்.. வேற ஒண்ணுமில்ல என்பது போல சிரித்துக் கொண்டே பெவிலியனுக்கு நடையைக் கட்டுவார். இந்த அணுகுமுறை, இந்தத் தொடரில் ரொம்ப ரொம்ப முக்கியம். இங்கிலாந்து பவுலர்களின் ஆக்ரோஷத்துக்கு நாம் முகத்தில் மதிப்பே கொடுத்துவிடக் கூடாது. அது இயற்கையாக தவானுக்கு கைக் கூடுகிறது. அதற்காக, ஐந்து டெஸ்ட் போட்டியிலும் இவர் ஆட வேண்டும் என்று சொல்லவில்லை. முதலில் இந்தப் போட்டியில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.
தொடக்கத்தில் இறங்கி விறுவிறுவென அடித்துக் கொண்டே இருப்பது தவான் ஸ்டைல். அப்படி அவர் குறைந்தபட்சம் 60 - 70 ரன்கள் அடித்தாலே அது அணிக்கு பெரிய சப்போர்ட் தான். கன்சிஸ்டன்சியில் லோகேஷும் தவானும் ஒன்று தான். ஆனால் இடது, வலது பார்ட்னர்ஷிப் என்ற ஃபார்முலாவில் விஜய், தவானை இப்போட்டியில் களமிறக்கினால் இங்கிலாந்துக்கு டஃப் கொடுக்க முயற்சிக்கலாம். கோலி ரன் அடிப்பதை விட, யாரை தொடக்க வீரர்களாக களமிறக்குவது என்பதற்கே பிரஷர் அதிகமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
மிடில் ஆர்டரை பொறுத்தவரை, அதுவும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாகவே உள்ளது. புஜாரா, ரஹானே தொடர்ச்சியாக தடுமாறுகின்றனர். குறிப்பாக, ரஹானே ரொம்ப காலமாகவே அவுட் ஆஃப் டச்சில் தான் உள்ளார். எப்போது அவர் ஃபார்முக்கு திரும்புவார் என அவருக்கே தெரியாது போல...
கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை, இப்போதே ஸ்லெட்ஜிங்கை எதிர்கொண்டு வருகிறார். ஃபார்ம் + நம்பிக்கை ன இரண்டுமே அவரைப் பொறுத்தவரை நல்ல நிலைமையில் இருப்பதாகவே தெரிகிறது. களத்தில், இங்கிலாந்து வீரர்கள், தன்னை குறிவைத்து வசைபாடுவார்கள் என்பது கோலிக்கு நன்றாக தெரியும். எனவே, அது போன்ற சீப் டாக்டிக்ஸ்-ல் சிக்கி, டெம்பர் ஆகி, தனது விக்கெட்டை இழந்து விடக் கூடாது. இவற்றை, கோலி ஓவர் டேக் செய்துவிட்டால், நிச்சயம் இரண்டு மூன்று சதங்களை எதிர்பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி, கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற போது, இந்திய அணி 3-1 என டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. குறிப்பாக, விராட் கோலி 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6, 20 என ஐந்து டெஸ்ட் போட்டியில், 10 இன்னிங்ஸில் மொத்தமாக 134 ரன்களே எடுத்தார். இதனால், இங்கிலாந்து ரசிகர்களாலும், ஊடகங்களாலும் அதிகமாக ட்ரால் செய்யப்பட்டார். அந்த களங்கத்துக்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்க வேண்டிய கடமையும் கோலிக்கு உள்ளது.
லோ ஆர்டரில், தினேஷ் கார்த்திக் மற்றும் கருண் நாயர் அணியில் இடம் பிடிக்கலாம். கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அஷ்வினோ அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கே மட்டுமே இடம் கிடைக்கும். 95 சதவிகிதம் 3 ஃபாஸ்ட் மற்றும் ஒரு ஸ்பின் பவுலிங் அட்டாக்கோடு இந்தியா களமிறங்க உள்ளதாகவே தெரிகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், குல்தீப்பை விட அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுப்பது பெட்டர் எனலாம்.
பொதுவாக குல்தீப்பை, வேகமாக ஆட நினைத்து தான் பேட்ஸ்மேன்கள் மோசம் போவார்கள். ஆனால், இது டெஸ்ட் போட்டி. ஆகவே, அடிக்கத் தூண்டி ஆட்டம் இழக்க வைப்பது என்பது இங்கு சற்று கடினமான காரியம். தவிர, குல்தீப்பிடம் வேரியேஷன்ஸ் பற்றாக்குறை உள்ளது. அது அஷ்வினிடம் அதிகமாகவே உள்ளது.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பெரிய சந்தேகம் தேவையில்லை. பும்ரா காயத்தால் அவதிப்படுவதால் இஷாந்த், உமேஷ், ஷமி ஆகியோர் அணியில் இடம் பிடிப்பது உறுதி.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பிருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல்:
விஜய், தவான், புஜாரா, கோலி, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஷமி.
நமது இந்த பிரிவியூ, முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.