சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 3-1 என்ற கணக்கிலும், இலங்கைக்கு எதிராக 5-0 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தற்போது ஒருநாள் அணிக்கான தரவரிசையில், தென்னாப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தாலும், நாளை தொடங்கவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றுவதன் மூலம், இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாளை மும்பையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 2009-2010 ஆண்டு முதல் இதுவரை இரண்டு ஒருநாள் தொடரில் மட்டுமே இந்திய மண்ணில் இந்திய அணி தோற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், பாகிஸ்தானிற்கு எதிராகவும் இந்திய அணி தொடரை இழந்துள்ளது. அதன்பின் நடந்த வேறெந்த ஒருநாள் தொடரையும் இந்தியா இழக்கவில்லை.
இந்த நிலையில், நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் நியூசிலாந்து உள்ளது. இதுகுறித்து, அந்த அணியின் வீரர் டாம் லாதம் கூறுகையில், "இந்தியாவின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தான், ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டனர். இதனால், நாங்கள் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள அதிக பயிற்சிகள் மேற்கொண்டுள்ளோம். ஸ்பின் பந்துவீச்சில் அதிக ரன்கள் அடிப்பதே மிகவும் முக்கியம். குறிப்பாக, கேப் பார்த்து அதிக பவுண்டரிகள் அடிப்பதில் கவனம் செலுத்துகிறோம் "என்றார்.
நாளைய போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், "இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரஹானே, லோகேஷ் ராகுல் என நான்கு ஒப்பனர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சிறப்பாக விளையாடுபவர்கள் தான். இதனால், இருவர் கட்டாயமாக வெளியில் உட்கார வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ரஹானேவை மிடில் ஆர்டரில் இறக்கிவிட்டு அவரை குழப்பம் அடையச் செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்திய அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எப்போது அவரை ஓப்பனிங்கில் களம் இறக்கினாலும், அணிக்காக அவர் சிறப்பாக விளையாடுகிறார்" என்றார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் வில்லியம்சன், குப்தில், டெய்லர், முன்ரோ போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், போல்ட், சவுதி, மிலின் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு போல்ட் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை தொடரை இழந்த நியூசிலாந்து அணி இந்த தடவை இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.
இந்த ஆட்டம் பகல்-இரவாக நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, தவான், கேதர் ஜாதவ், தோனி, மனிஷ் பாண்டே, ரஹானே, ஹர்த்க் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்.
நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டாம் லாதம், ராஸ் டெய்லர், கோலின் கிராண்ட் ஹோம், காலின் முன்ரோ, நிக்கோலஸ், சான்ட்னர், ஜார்ஜ் வொர்க்கர், டிம் சவுதி, போல்ட், மிலின், பிலிப்ஸ், ஹென்றி, சோதி.
இப்போட்டியின் முழு லைவ் ஸ்கோர்கார்டை ietamil.com-ல் நீங்கள் நாளை காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.