இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் ஒருநாள் போட்டி, மும்பையில் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, அப்படி இப்படியென்று ஒருவழியாக 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் 20 ரன்னிலும், தவான் 9 ரன்னிலும், நியூசி., வேகப்பந்து வீச்சாளர் போல்ட் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து கேதர் ஜாதவ் 12 ரன்னில் வெளியேற, இந்திய அணி 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் கேப்டன் கோலியும், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் 'லைட்வெயிட்'-ஆக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதாவது, ப்ரில்லியன்ட்டான பந்துகளை நிதானமாக தவிர்த்து(லைட்), வாகான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி (வெயிட்) சிறப்பாக ஆடினர். ஆனால், 37 ரன்களில் கார்த்திக் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோனி, 24 ரன்னில் அவுட்டானார்.
இருப்பினும், மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி, தனது 31-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், 200-வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இரண்டாவது வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக, ஏபி டி வில்லியர்ஸ் தனது 200-வது போட்டியில் சதம் அடித்திருந்தார்.
தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களில் அவுட்டான போது, இந்திய அணி 45.3 ஓவரில் 238 மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், கேப்டன் கோலியால் இறுதிக் கட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்த முடியவில்லை. நியூசி., பவுலர்கள் பல டாஸ் பந்துகளை வீசினர். அதில் சில பந்துகளுக்கு நோ-பால் கொடுத்திருக்கலாம். கோலி எவ்வளவோ முறையிட்டும் அம்பயர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத புவனேஷ் குமார் ஹர்திக் பாண்ட்யாவின் பணியை, மிகச் சிறப்பாக செய்து முடித்தார். 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசி, 280 ரன்கள் எடுக்க உதவினார்.
நியூசி., தரப்பில் போல்ட் அட்டகாசமாக பந்துவீசி 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நாலும் பெரிய தலைகள் தான்(தவான், ரோஹித், தோனி, பாண்ட்யா).
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னில் அவுட்டானாலும், மூத்த வீரர் ராஸ் டெய்லர் 95 ரன்கள் குவிக்க, டாம் லாதம் சதம் விளாசி அசத்தினார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இதனால், 48.5-வது ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 284 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.