கான்பூரில் இந்தியா, நியூசிலாந்து மோதிய இறுதிப் போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. மூன்று போட்டிகள் இந்த ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசி கேப்டன் வில்லியம்சன், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். ரோஹித் ஷர்மா 147 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் குவிக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசி அணியும் சிறப்பாக விளையாடியது. கோலின் மன்ரோ, வில்லியம்சன், டாம் லாதம் ஆகியோர் அரைசதம் கடந்தனர். இறுதிக் கட்டத்தில் அந்த அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், புவனேஷ் மற்றும் பும்ரா முக்கியமான கட்டங்களில் யார்க்கர்கள் வீசி, நியூசிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
கடைசி ஓவரில், 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக பந்து வீசிய பும்ரா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிப் பெற்றது. இதனால், 2-1 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது.
இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை. கடந்த 9 ஒருநாள் தொடர்களில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2015-16-ல் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-3 என இந்தியா இழந்திருந்தது. மற்ற 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றது 10-வது தொடராகும். இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றதால் 10-ல் 9 தொடரை இந்தியா கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டியில் இந்தியா, தனது சொந்த மண்ணில் மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டித் துளிகள்:
*ரோஹித் ஷர்மா 15-வது ஒருநாள் சதத்தை(147) அடித்தார்.
*கேப்டன் விராட் கோலி 32-வது ஒருநாள் சதத்தை(113) பூர்த்தி செய்தார்.
*இந்தியாவுக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15 சதங்களுடன் சேவாக்குடன் இணைந்து 4-வது இடத்தை ரோஹித் பகிர்ந்து கொண்டார்.
*நியூசிலாந்துக்கு எதிராக ரோஹித் எடுக்கும் முதல் ஒருநாள் சதம் இதுதான்.
*ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். 194 ஆட்டங்களில் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.
*ஒரு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் (2017) மொத்தம் 1437 ரன்கள் இதுவரை விளாசியுள்ளார்.
1437 V Kohli (2017) *
1424 R Ponting (2007)
1373 Misbah-ul-Haq (2013)
1268 M Azharuddin (1998)
1244 A Mathews (2014)
*கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.
*இந்தியாவில் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் வழங்கிய நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில், நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 10 ஓவர்கள் வீசி, 81 ரன்கள் கொடுத்துள்ளார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
85 C Drum, Hyderabad, 1999
81 Boult, Kanpur, 2017