நியூசிலாந்து, இலங்கை அணிகள் உடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் மீண்டும் ஆசிஷ் நெஹ்ரா இடம் பிடித்துள்ளார்.
முன்னதாக, நியூசிலாந்து உடனான் முதல் டி20 போட்டியோடு ஓய்வுப் பெறப் போவதாக நெஹ்ரா அறிவித்திருந்தார். டெல்லியில் இப்போட்டி நடைபெறுவதால், தனது சொந்த மக்களுக்கு முன் ஓய்வுப் பெற விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் அளித்துள்ள பேட்டியில், "டெல்லியில் நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் நிச்சயம் நெஹ்ரா விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. குறிப்பிட்ட அந்த நாளில் தான் இது குறித்து முடிவு செய்யப்படும். இப்போதே அதுகுறித்து உறுதியளிக்க எங்களால் முடியாது.
மேலும், நியூசிலாந்து தொடர் வரை மட்டுமே நெஹ்ரா அணியில் இருக்க வேண்டும் என்று அவரிடமும், அணி நிர்வாகத்திடமும் கூறியுள்ளோம். ஏனெனில், சுழற்சி முறையில் தான் நாம் வீரர்களை அணியில் சேர்க்கிறோம். இது கேப்டனுக்கும் பொருந்தும். இதனால், கேப்டன் கோலிக்கு, உள்நாட்டு தொடரில் சில போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்படும். இந்திய ஏ அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்களுக்கு தொடர்ச்சியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, அவர்களை பக்குவப்படுத்தி வைத்திருக்கிறோம். புதிய தலைமுறை அணியில் உள்நுழைவதற்கு தயாராக உள்ளது" என்றார்.