India v New Zealand : ஆஸ்திரேலியாவை பந்தாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த பலப்பரீட்சைக்கு தயாராகி விட்டது. நியூசிலாந்து உடன் ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் மோத உள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் pitch கண்டிஷன்ஸ் வேறு படும். மேல்போன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் ஆட்டம் சூழலுக்கு சாதமாக மாறியது; அது பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது.
நியூசிலாந்து பிட்ச்களை பொறுத்தவரை அவை அனைத்துமே பெரும்பாலும் வேக பந்துவீச்சுக்கு சாதகமாவே இருக்கும். முதல் போட்டி நடக்கும் நேப்பியர் ஸ்டேடியத்தில், 2013 முதல் ஆறு ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன அதில் பேஸ் பௌலர்ஸ் 65 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். ஸ்பின் பௌலர்கள் 17 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர். இதில் தெளிவாக பிட்ச் வேக பந்து வீச்சுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்று நமக்கு தெரிகிறது.
சரி, இந்த கண்டிஷன்ஸ் இந்தியா அணியை எவ்வாறு பாதிக்கும்? சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய வேக பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. புவனேஸ்வர் குமார் எட்டு விக்கெட்களை எடுத்தார், ஷமி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். இவர்கள் இருவருமே நாளைய போட்டியில் களம் இறங்குவார்கள். புவனேஸ்வரின் ஸ்விங் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு நல்ல பலனை தரும். மூன்றாவது வேக பந்து வீச்சாளர் தான் இப்பொழுது இந்தியாவின் கவலை. விஜய் ஷங்கர் எகானாமிகலாக (6-0-23-0) பந்துவீசினாலும் சின்ன பௌண்டரிகளுடைய நியூசிலாந்து மைதானங்களில் அவருடைய மீடியம் பேஸ் எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்று தெரியாது. கலீல் அகமத் அல்லது சிராஜ் அந்த இடத்தை கைப்பற்ற வாய்ப்பு அதிகம். சிராஜை விட இடது கை வீச்சாளர் கலிலின் வேகத்திற்கு நியூசிலாந்து பிட்ச் நல்ல ஒத்துழைப்பு தரும்.
இவர்களை தவிர்த்து ஸ்பின் பௌலிங்கில் செம பாஃர்மில் இருக்கும் சஹால் மற்றும் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் அவர்கள் இடத்தை பாதுகாத்து விடுவார்கள். சிறிய மைதானம் என்பதால் சஹால் தனது வழக்கமான looping டெலிவரிகளை தவிர்க்க வாய்ப்பு அதிகம். ஸ்டம்ப்- டு-ஸ்டம்ப் பந்துவீச்சை இவர் அதிகம் பயன்படுத்துவர்.
அடுத்தது இந்தியாவின் மிடில் ஆர்டர். தோனி பார்ஃமில் இருப்பது மகிழ்ச்சி தான் ஆனால் ஆஸ்திரேலியாவில் முன்னணி வேக பந்து வீச்சாளர்கள் யாருமே இல்லாத பொழுது தோனி அந்த அணியின் பௌலர்களை விளாசினார். நியூஸிலாந்து அணியில் போல்ட், சௌதீ, மாட் ஹென்றி என்று ஒரு படையே இருக்கிறது. அனைவருமே 145 + வேகத்தில் பந்தை வீச கூடியவர்கள் அவர்களை எதிர்கொள்வது தான் சவால். தோனியின் ரெகார்ட் நியூசிலாந்தில் பிரமாதமாக உள்ளது. அவர் அங்கு ஆடிய 10 போட்டிகளில் 456 ரன்கள் அடித்துள்ளார் அதில் ஐந்து அரைசதம் அடங்கும். இவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். புதிதாக அணியில் இடம் பிடித்திருக்கும் சுப்மண் கில் பிளேயிங் XI -ல் இடம் பெற வாய்ப்பு குறைவு. ஓப்பனிங் பேட்ஸ்மேனான அவர் ரோஹித்/தவான் கூட்டணி இருக்கையில் மிடில் ஆர்டரில் எப்படி செயல்படுவர் என்று நாம் பார்க்க வேண்டும்.
வழக்கம் போல் டாப்-ஆர்டர் தான் இந்தியாவின் பலம். தவான்,ரோஹித் மற்றும் கோலி தங்களின் முதுகில் பாரத்தை சுமக்க வேண்டும். லெஃப்ட் ஆம் பேஸர்களுக்கு எதிரே ரோஹித்தின் ரெகார்ட் படு மோசம். இவர் எப்படி ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சை எதிர்கொள்வார் என்பதில் தான் சவால் இருக்கிறது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 300 + என்பது மினிமம் எடுக்க வேண்டிய ரன்கள். சிறிய பௌண்டரிகளை கொண்ட நியூசிலாந்தில் இரண்டாவது இன்னிங்சில் பனி பொழிவு ஏற்படும், அது பந்து வீசுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். சமீபத்திய ஆஸ்திரேலியா தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் இந்தியா முறையே 234/3, 299/4, 259/9 ரன்கள் எடுத்தது. அந்த பக்கம் நியூசிலாந்து அணியோ சமீபத்தில் ஸ்ரீலங்காவுடன் தனது சொந்த மண்ணில் நடந்த கடைசி மூன்று ஒரு நாள் போட்டிகளில், 364/4, 319 /7, 371/7 என்று பந்தாடியது. ஆகையால், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா வெற்றி நமக்கு மகிழ்ச்சி தந்திருந்தாலும் அவர்களின் முன்னணி வீரர்கள் இல்லாமல் நாம் ஜெயித்தோம் என்று நமக்குள் ஒரு சிறிய எண்ணம் இருக்கிறது ஆனால் நியூசிலாந்து அதன் முழு பலத்தோடு, அதன் மண்ணில் நம்மை எதிர்கொள்வதால் இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் ஜனவரி 23 காலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.